
திசையறியாது
பறக்கும்
காற்றாடிக்குத்
துணையாக நூலும் இல்லை
சூரியனை இழுத்துப் போகும்
மேகத்தை
அடித்து வீழ்த்துகிறது
பேய்க் காற்று
பத்தாவது தளத்தில்
குக்கரில் பொங்கல்
தொலைகாட்சியில்
அறுவடைத் திருவிழா
பிரபல்யங்களை நெருங்குவதில்லை
முகம் தெரியாதவர்களோடு கை குலுக்குவேன்
எளிய மனிதன் எனக்கு எந்த எதிர்பார்ப்புமில்லை
கிளியே கிளியே கூண்டுக்கிளியே
வீட்டுக்கும் கூட்டுக்கும் வித்தியாசம் உண்டா?
சிறையில் சிறந்தது தாழ்ந்தது என இல்லை
தாகம் அடங்கவில்லை
வேர்களை அனுப்பி
நீரைத் தேடுகிறது
என் சாயலாய் இருக்கிறது அந்தமரம்
உச்சரிக்கிறேன் உன்பெயர்
உடலெல்லாம் பூக்கிறது
முத்தமிடு பூக்களெல்லாம் உதிரட்டும்
விநோதங்கள் சுழல்கின்றன
புதிர்கள் உள்ளாடுகின்றன
இதயத்தின் எல்லாக்கதவுகளையும் திறக்க முடியவில்லை
பூக்கும் உதிரும்
உதிரும் பூக்கும்
விசித்திரமான தாவரம் தனிமை.
🦀
