கம்பன் கவியமுதம்—27/ வளவ. துரையன்

                     

                      

                 எருமைப் பாலுண்ணும் அன்னக் குஞ்சு

சேல் உண்ட ஒண்கணாரின் திரிகின்ற செங்கால் அன்னம்
மாலுண்ட நளினப் பள்ளி வளர்த்திய மழலைப் பிள்ளை
காலுண்ட சேற்று மேதி கன்று உள்ளிக் கனைப்பச் சோர்ந்த
பாலுண்டு துயிலும் பச்சைத் தேரை தாலாட்டும் பண்ணை [45]

[சேல்=மீன்; ஒண்கண்=ஒளி பொருந்திய கண்; மாலுண்ட நளினம்=பெருமையான தாமரை; மேதி=எருமை; உள்ளி=நினைத்து; பண்ணை=வயல்]

இந்தப் பாட்டில் கம்பன் ஓர் அழகான இயற்கைக் காட்சியைக் காட்டுகிறான். செழுமையான வயல்கள் இருக்கின்றன. அங்கே சேலென்னும் மீன்களைப் போன்ற ஒளி பொருந்திய கண்களை உடைய மகளிரைப் போல நடக்கின்ற அன்னங்கள் வசித்து வருகின்றன. சிவந்த கால்களைக் கொண்ட பெண் அன்னம் தன்னுடைய ஓர் இளங்குஞ்சை மென்மையான தாமரை மலரான படுக்கையில் கிடத்திப் போகிறது. அப்பொழுது அங்கே கால்களில் சேற்றை உடைய எருமை வருகிறது. அது தன் கன்றை எண்ணிக் கனைக்கிறது. அன்பினால் அந்த எருமைக்கு உடனே பால் சுரந்து கொட்டுகிறது. அப்பாலை அந்த இளம் அன்னக் குஞ்சுக் குடித்துத் தூங்குகிறது. அதன் தூக்கத்திற்கு அங்கிருக்கும் பச்சை நிறமுள்ள தவளை தன் குரலில் கத்தித் தாலாட்டுகிறது.

ஆண்டாள் திருப்பாவையில் பாடும் “கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கிரங்கி நினைந்து முலைவழியே நின்று பால் சோர” என்னும் பாசுர அடிகள் இப்பாடலைப் படிக்கும்போது நினைவுக்கு வருகின்றன. அதிலும் தன் கன்றை நினைத்த உடனேயே எருமைக்குப் பால் சுரந்து கொட்டுகிறது என்பார்.

அத்துடன் கம்பனின் இப்பாடலை ஒரு குறியீட்டுப் பாடலாகவும் கொள்ளலாம். அதாவது எருமையின் பால் அதன் உரிமையாளனுக்கோ அல்லது அதன் கன்றுக்கோதான் போக வேண்டும். ஆனால் சம்பந்தமில்லாத அன்னக் குஞ்சிற்குப் போய்ச் சேருகிறது. அதேபோல அயோத்தியின் அரச சிம்மாசனம் இராமனுக்கோ அல்லது கைகேயி வரம் வாங்கியபடிக்கு பரதனுக்கோதான் போக வேண்டும் ஆனால் தொடர்பே இல்லாத பாதுகைக்கன்றோ போகிறது. இக்காட்சி வரும் அச்சூழலை முன்கூட்டியே உணர்த்துகிறது போலும்.