
பெரிய புராணத்தில் வரும் கண்ணப்ப நாயனார் சரித்திரத்தில் கண்ணப்பர் எனப் பெயர் பெறப்போகும் திண்ணனார், தான் சுவைத்துத் தேர்ந்தெடுத்த இறைச்சியை இறைவனுக்குப் படைக்க பூசை செய்கிறார். வாயில் நீரை அடக்கிக் கொண்டுவந்து அதனால் அபிஷேகம் செய்கிறார். மேலும் மலர்களை எங்கு வைத்து எடுத்து வருவது எனத் தெரியாமல் தலையில் சூடி எடுத்து வருகிறார்.
இப்பூசனையால் அலங்கோலமாகக் கிடந்த கோயிலால் மனம் வருந்திய சிவாச்சாரியாரின் கனவில் சிவபெருமான் வந்து இது தமக்கு ஏற்புடையதே என்று கூறுகிறார். அதில் ஒரு பாடல். “ அவன் உடல் என்னும் கலம் முழுதும் அன்பு ஒன்றே நிறைந்து ஒழுகுவதால் அவன் வாயில் இருந்த புனித நீர் எனக்கு கங்கை நீரைக் காட்டிலும் மேன்மையானதே” என்கிறது. அன்பே சிவம் என்ற தத்துவத்தை வலியுறுத்தும் சேக்கிழாரின் பாடல் இது.
“உருகிய அன்பொழிவின்றி
நிறைந்த அவன் உருவென்னும்
பெருகியகொள் கலமுகத்தில்
பிறங்கியினி தொழுகுதலால்
ஒருமுனிவன் செவிஉமிழும்
உயர்கங்கை முதல்தீர்த்தப்
பொருபுனலின் எனக்கவன்தன்
வாயுமிழும் புனல்புனிதம்”.
