கால்கள் உள/நா.விச்வநாதன்

அக்காவின்
வளைகாப்பிற்குப் பின்
எஞ்சிநிற்பது காற்பணம்தான்
ஓடிப்போ என்றார் அப்பா.

அழாதே பெண்ணே
அத்தனைக்கும் விடிவுண்டென
ஆறுதல் சொன்னாள் அம்மா
படத்திலிருந்து.

கொல்லைக் கிணற்றோரம்
துவைக்கின்ற கல்லோ
பகலில் விழுங்கிய சூட்டைப்
பின்புறமாகப் புணர்ந்து
சேர்க்கும் குரூரமாய்.

அவரவர் எச்சத்தாற்
காணப்படுமென்று
உச்சந்தலையில்
உமிழ்ந்துவிட்டுப்
பறக்குமொரு ராக்காக்காய்.

பின்னறையில்
அண்ணனின் கேள்விக்கு
மௌனித்திருந்தே
பதில் சொல்லும்
அண்ணிக்காங்கே
அவசரம் துரத்தும்
அரவம் சுடும்

ஓடிப்போகக் கால்களின்றி
உட்கார்ந்திருக்கும்
என்னைப் பார்த்து
அந்தரத்து
நட்சத்திரமொன்று
சிரிக்கும்
‘எனக்குமட்டும்

கால்களுண்டோ?

கால்களுண்டோ?’