அலெஃப் மற்றும் கொரோனா —எம்.டி.முத்துக்குமாரசாமி

மீள்தனித்த உயிர் பிரபஞ்சப் பொதுமையோடு புலப்படும் முறைகளிலும் புலப்படா விதங்களிலும் தொடர்புகொண்டிருப்பது கொரோனா என்ற கிருமியின் வழி நமக்கு நிதர்சனமாவது என்னவொரு சோகம்! போர்ஹெஸின் ‘அலெஃப்’ சிறுகதையைப் படித்தல்லவா இந்த உறவு நமக்கு மனதிலாகியிருக்க வேண்டும்? சுவாசம் வளி மண்டலம் முழுதுடனும் உறவாடுகிறது ஒரு சிறு ஒலியும் கூட அதிர்வலைகள் அத்தனையோடும் தொடர்புடையது என்பதன் சுவாதீனத்தை ஒரு கிருமி வந்தா நமக்குச் சொல்ல வேண்டும்? ‘அலெஃப்’ சிறுகதையை மீண்டும் வாசிப்பது இருளில் வால் நிமிர்த்தி நடந்து செல்லும் ஒரு பூனையின் தன்னம்பிக்கையை இந்த கோரானா நாட்களில் எனக்கு அளிக்கிறது. முன்பு வாசித்தபோது போர்ஹெஸின் கதையில் தனித்த இருப்புக்கும் பிரபஞ்ச பொதுமைக்கும் இடையிலான உறவு இலக்கியத்தின் அபாரமான கற்பனா உத்தி என்றவாறே மனம் நிறைத்திருந்தது. ‘அலெஃப்” கதையில் கதை சொல்லி இந்த பிரபஞ்சத்தின் (cosmos) மையப்புள்ளி ஒன்றை கார்லோஸ் அர்ஜெண்டினோவின் வீட்டிலுள்ள தூசு நிறைந்த நிலவறை மதுக்கூட மூலையொன்றில் கண்டுகொள்கிறான். அந்த வீடு ப்யூனஸ் அய்ரிசில், காராய் தெருவில் இருக்கிறது. அவன் பிரஞ்சத்தின் மையப்புள்ளி ஒன்றை கண்டுகொள்வது அக்டோபர் மாத மதியத்தில் நிகழ்கிறது. போர்ஹெஸின் கதைகளில்தான் எத்தனை பண்பாடுகள், எத்தனை மொழிகள், எத்தனை தேசங்கள், எத்தனை இலக்கியங்களுக்கான குறிப்புகள் வருகின்றன. ஆனால் அவருடைய பிரபஞ்சத்தின் மையப்புள்ளியோ அவருக்கு பக்கத்துத் தெருவில் பக்கத்து வீட்டில்தான் இருப்பதாக கதையில் எழுத வருகிறது. என்னுடைய பதின்பருவத்தில் திருநெல்வேலியின் இரட்டடுக்கு பாலம்தான் பிரபஞ்சத்தின் மையப்புள்ளி என புனைந்திருந்தேன். சென்னையில் பல மேம்பாலங்கள் இருக்கின்றன என்றாலும் இரண்டு அடுக்கு விசேஷமில்லையா என்ற எண்ணம் எனக்கு. போர்ஹேசுக்கு அல்லது போர்ஹேசின் கதைசொல்லிக்கு அலெஃபின் மையம் எங்குமிருக்கிறது அதன் விளிம்பு எங்குமில்லை அது தூசு படிந்த மூலையிலும் இருக்கிறது. கிட்டத்தட்ட கொரானோ வைரஸின் விகசிப்பு போல. என் சுவாசம் எங்கோ இருக்கும் ஒரு சீனனின், அமெரிக்கனின், இத்தாலியனின் ஏன் உலகில் எங்கோ இருக்கும் ஒரு ஜீவனின் சுவாசத்தோடு தொடர்பு கொள்ளக்கூடும் அல்லது ஏற்கனவே தொடர்பில் இருக்கூடும் என்பது என்ன மாதிரியான யதார்த்தம்? போர்ஹெஸ் எழுதுவார், ‘மற்றவர்கள் பிரபஞ்சம் என அழைப்பதை நான் நூலகம் என அழைக்கவிரும்புகிறேன். இதுவரை எழுதப்பட்ட எழுதப்படப்போகிற அத்தனை நூல்களையும் உள்ளடக்கிய நூலகம். போர்ஹேசுக்கு அந்த மாதிரியான நூலகத்தை அடையாளம் காணுதல் கொண்டாட்டத்திற்குரிய நிகழ்வு. ஏனெனில் அது அனைவரின் கதைகளையும் உள்ளடக்கிய பருண்மையான பொருளொன்றைக் காணும் நிகழ்வு. கனவுகளின் சுழல்பாதை வழி, சோர்வற்ற தீவிர இலக்கிய தத்துவ வாசிப்பின் வழி நமக்கு அனுபவமாகக்கூட சாத்தியமுள்ள ஒரு அபூர்வம் நமக்கு கொரானா நாட்களில், வீடடைந்து கிடக்கையில் சித்திக்கிறது. இது எண்ணற்ற மனிதர்களின் துயரங்கள் வழி, சாவுகளின் வழி, ஒரு கிருமியின் வழி நமக்கு அனுபவமாகிறதே என்பதுதான் இதன் அளப்பரிய சோகம்.