
கண்ணில் சோர்ந்துவிழும்
காட்டுத்தீ,
நாணமுறும் குறிப்பை
எண்ணி இமை மூட;
ஏகம்
இருளாக மாறிச்சிதற,
போகம் பலவென்று
புணர்ந்தால்….
பொய் யென்றார் !
கனல் பிறக்கும் கருவறையைக்
கண்ணில் கொண்டவரை
நண்ணிப் பொருள் கேட்டேன்;
நடனத்தில் பதிலளித்தார் !
இருள்..
வந்தவழி வீதியிலே
வழிகாட்டி நின்றவரைச்
சந்தேகம் கேட்டேன்;
செய்யுள் கடைவிரித்தார்!
சொல்லைத் துருவி
சூனியத்தில்
சிக்கிக் களைப்படைந்தேன் !
மீண்டும் இருள் ……
சட்டம் புதுப்பித்துச்
சாறெடுத்துப் பல்கதையாய்
விட்டுவிட்டுச் சென்றார்
விலகாத் திரைக்குள்ளே :
எட்டவில்லை என் தலைக்கே !
எல்லாம் இருள்….
முட்டியவர் தாம் குனிந்து
முதுகை வளைத்துள்ளே
சட்டெனவே போய்விட்டார்!
செல்லும் கதவடைத்தார் !
உள்ளே இருளோ ?
ஒளிதுயிலும் அதிசயமோ?
காணமுடியவில்லை.
கதவைத் திறந்துள்ளே
உண்டிது தான் என்றுரைக்க
உதவி செய்வார் யாரிங்கே ?
