
கவிதைச்சூழல்
ஷேக்ஸ்பியர் இசையை மையமாக வைத்து எழுதிய இசைப்பாடல்கள் ( சானட் ) மொத்தமே இரண்டு தான். ஒன்று சானட் எண் 8 மற்றொன்று சானட் 128 .இது காதலியை இசையோடு ஒப்பிட்டு கவிஞர் பாடிய காதல் கவிதையாகும். காதலி பெயரை கடைசி வரையிலும் கவிஞர் சொல்லவேயில்லை.
காதலி virginal என்றபழமையான இசைக்கருவியை வாசித்துக்கொண்டிருக்கிறாள். அதைப்பார்த்துக்கொண்டிருக்கும் கவிஞர் அந்தக்கருவியின் தந்திக்கம்பிகளின் மீது பொறாமை கொள்கிறார். ஏனென்றால் அந்த தந்திக்கட்டைகளை அவள் விரல்கள் தழுவுவதும் பதிலுக்கு அவைகள் ஓடோடி வந்து அவளின் உட்பக்க விரல்களை முத்தமிட்டு செல்கின்றனவே அது போதாதா?…
Sonnet 128
(பாடல் 128 )
என்னிசை நீ தானே கண்ணே !
என்னிசையே!
நீ மீட்டும் இசையில்
என்னிதயம் தன்லயமின்றி துடிக்குதடி
இசை நரம்புகளின் வழியே
பிணைக்கப்பட்ட அந்த மரக்கட்டைகள்
ஓ எவ்வளவு கொடுத்து வைத்தவைகள் !
தொட்டவுடன் ஒடோடி வந்து
உட்பக்கம் முத்தமிட்டு முத்தமிட்டு
செல்கின்றனவே உன் விரல்களை
இசையில்முத்தங்கள்தான்அறுவடையா?
தித்திக்கும் முத்தங்களை
மொத்தமாக அள்ளிக்கொள்ள வேண்டிய
என் உதடுகளோ
ஒரு அந்நியன் போல தள்ளியே
நிற்கின்றன ஆற்றாமையில்
தந்திக்கட்டைகளில் தத்தி தத்தி
நடந்து செல்லும் உன் விரல்களுக்கும்
தாவி தாவி குதித்து நடனமிடும்
உன் விரல்களுக்கும்தான் என்ன உறவோ ?
அடியே என் காதலி இது நியாயமா ?
உயிரற்ற மரக்கட்டைகள்
மகிழ்ச்சியில் துள்ளுகின்றன
உயிர்ப்புள்ள என் உதடுகளோ
வறண்டு போய் கிடக்கின்றன
இதோ உன்காதலன்
பொறாமையில் தகிக்கிறேன்
அடியே அந்த இசைக்கட்டைகளாக
நான் மாறிவிடட்டுமா?
உயிரற்றவைகள் எல்லாம்
உன் தீண்டலில் தான் உயிர் பெற்று
எழுந்து விடுகின்றவே !
என் அன்பே ஏன் என்னை
பார்வையிலேயே எரிக்கிறாய்
நான் உயிர் வாழ நமக்குள்
ஒருஒப்பந்தம் செய்து கொள்ளலாமா?
இனி மேல் உன் விரல்களை மட்டுமே
அந்த வாத்தியத்திற்கு வழங்கவேண்டும்
உன் இதழ் முழுமையையும் எனக்கே
வழங்க வேண்டும்
ஏனென்றால்
எனக்கு மீட்டத்தெரிந்த ஒரே இசை
முத்தம் மட்டும்தானே !
மூலம் –ஷேக்ஸ்பியர்
கவிதைச்சூழல்
Attachments area
