
சாதிமாறிப்பிறந்ததால் சரித்திரத்தில் தோற்றவன்…
கப்பலோட்டிப் பிழைத்ததால்
கஞ்சிக்கு வழியற்றவன்.
நன்றிகெட்ட மானிடத்தில்
வஞ்சகத்தில் வீழ்ந்தவன்…
நாற்பதாண்டுகாலம்
இருட்சிறையில் பூத்தவன்.
காந்தியத்தை எதிர்த்ததால்
கதியற்றுப்போனவன்…
வறுமைக்கு வாழ்வுதந்த
மாண்புள்ள மன்னவன்.
சிகரத்தில் ஏறிநின்று
சிரம் உயர்த்தி வாழ்ந்தவன்…
சொந்தக்கட்சி சூழ்ச்சியினால்
புழுதிமண்ணில் வீழ்ந்தவன்.
மக்களுக்காய்ப் போராடி
தன்வாழ்வை இழந்தவன்…
தன்னைக்கொண்டு மானிடத்தின்
உண்மைநிலைகொணர்ந்தவன்….
வியர்வைபூக்க செக்கிழுத்து
விலையின்றிப்போனவன்…
விளம்பரத்தில் புகழ்தேடா
புனிதமுள்ள மானிடன்.
தெள்ளுதமிழ் வள்ளுவத்தை
சீர்தூக்கி வகுத்தவன்…
வாழ்கையென்னும் பெரும்கணக்கை
போடத்தெரியாமல் திகைத்தவன்.
சேர்த்துவைக்கத்தெரியாமல்
தெருத்தெருவாய் அலைந்தவன்…
மாண்டபின்பு சரித்திரத்தில்
தியாகவடுவாக நிலைத்தவன்.
