கம்பன் கவியமுதம்–3/வளவ. துரையன்

பருந்தொடு தொடரும் நிழல்

பொருந்திய மகளி ரோடு வதுவையில் பொருந்து வாரும்
பருந்தொடு நிழல்சென் றன்ன இயலிசைப் பயன்துய்ப் பாரும்
மருந்தினும் இனிய கேள்வி செவிஉற மாந்து வாரும்
விருந்தினர் முகம்கண் டன்ன விழாவணி விரும்புவாரும் [47]

[வதுவை=திருமணம்; மருந்து=அமுதம்]

கோசல நாடு மக்கள் எப்படிப் பொழுது போக்கினார்கள் என்று அடுத்து சொல்லத் தொடங்கிப் பாடுகிறான் கம்பன். தமக்குப் பொருத்தமான மகளிருடன் சிலர் திருமணச் சடங்கில் பொருந்தினார்கள். இந்த இடத்தில் பொருத்தம் என்பது பருவம், வடிவம், குலம், செல்வம் போன்றவற்றில் பொருந்தி உள்ளதைக் காட்டும். வேறு சிலர் இயற்றமிழோடு இசைத் தமிழையும் அனுபவித்தார்கள். இந்த இடத்தில் இயற்றமிழும் இசைத்தமிழும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்திருப்பதற்குக் கம்பன் ஓர் உவமை கூறுகிறான். அதாவது பருந்துடன் அதன் நிழல் தொடர்ந்து செல்லுதல் போல இயலும் இசையும் தொடர்ந்து வருமாம். சிலர் அமுதத்தை விட இனிக்கும் கேள்விச் செல்வத்தை கேட்டார்கள். வந்த விருந்தினர்களின் முகம் பார்த்து அவர்கள் மகிழ அவர்களுக்கு அன்னம் அளிக்கும் விழாவை விரும்பினார்கள்.
”செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத்த வர்க்கு” என்னும் குறள் இங்கு நினைவு வருகிறது.