குடியரசு தின கொண்டாட்டம்! /கு. மா. பா. திருநாவுக்கரசு

கொட்டும் பூத்தூவி
கொடியேற்றம் காணட்டும்!
எட்டுத் திக்கும் – இன்றெங்கள்
பாரதக் கொடிகள்!

வானோக்கி உயர்ந்த
வண்ணக் கம்பத்தில் – எங்கள்
தேசக் கொடி மூவண்ணச்
சேதிகள் சொல்லட்டும்!

தூய்மை, வாய்மை, செம்மை – இம்
மூன்றின் பண்புகளை முறையே
காவி, வெள்ளை, பச்சை
கூவி உரைக்கட்டும்!

நீல எழில் மைய
அசோக சக்கரம்
ஞாலம் உய்ய – தர்ம
நெறிகள் சுழலட்டும்!

காற்றில் பறக்கட்டும்,
பாரதக் கொடிகள்!
ஏற்றிக் கைத்தட்டும்
இன்பங்கள் பெருகட்டும்!
இனிப்புகள் வழங்கட்டும்!

அடிமைத் தளைநீக்கி
முடியாட்சி போயிற்று! – நம்
குடிமக்கள் கொண்டாடும்
குடியாட்சி தோன்றிற்று!

ஆண்டு நாற்பத்தேழு
ஆகஸ்டு பதினைந்தில்,
காந்தி மகாத்மா கண்ட
கனவே நிறைவேறிற்று!

விடுதலைத் தன்னாட்சி
வித்திட்ட குடியாட்சி…
அரசியல் அமைப்புச் சட்டம்
அங்கே தான் உருவாச்சு!

அண்ணல் அம்பேத்கர்
அமைச்சின் தலைமை கீழ்
சட்டங்கள் பதிவாச்சு,
சரித்திரப் பொன்னேட்டில்!

மூன்றாண்டு முடியும் முன்
குடியாட்சி சட்டங்கள்! – அன்று
நாடாளுமன்றத்தில்
நன்னாளில் தீர்வாச்சு!

எழுபத்து மூன்று ஆண்டு முன்
ஜனவரி இருபத்தாறு! தில்லி,
ராஜ்பத் வீதியிலே
ராஷ்டிரபதி என்னும்
குடியரசுத் தலைவரின் கை
மூவண்ணக் கொடியேற்ற…
அடிமைத் தளையொடித்த
குடியாட்சி மகத்துவத்தை
அணிவகுப்பு மரியாதை
அன்று முதல் அலங்கரிக்க,
மக்களாட்சி மகத்துவத்தின்
மாண்புகளைப் பறைசாற்றும்
குடியரசுத் திருநாளை
கொண்டாடி மகிழ்ந்திடுவோம்!
ஒருமைப்பாட்டுடனே
பண்பாட்டைப் போற்றிடுவோம்!

கொட்டும் பூத்தூவி
கொடியேற்றம் காணட்டும்!
எட்டுத் திக்கும் – இன்றெங்கள்
பாரதக் கொடிகள்!