விடியுமா? கு.பா.ராஜகோபாலன்/ந.பானுமதி

எழுத்தாளர் கு பா ராஜகோபாலன் அவர்களின் விடியுமா என்ற கதையைப் பற்றிய என் கருத்துக்களை இதன்மூலம் உங்கள் இடம் பகிர்ந்து கொள்கிறேன்.
கும்பகோணத்திற் கும், சென்னைக்கும் இடையேயான ஒரு இரவின் பயணம் இருளும் ஒளியுமாக, நம்பிக்கையும் தத்தளிப்பு மாக, மனித மனங்களின் எண்ணச் சிதறல்களை வெளிக்காட்டும் விதமாக எழுதப்பட்டுள்ளது. சிவராம் ஐயர் டேஞ்சரஸ் என்ற தந்தி கையில் கிடைக்கையில் அதை நம்ப முடியாமல் மனம் பேதலிக்கிறது. அது உண்மையாக இருக்கக் கூடுமோ என்ற எண்ணம் தந்தியின் சார்பை எடுத்துக்கொள்ள, அப்படி எல்லாம் இருக்காது என்ற மன சமாதானம் மூலைமுடுக்கெல்லாம் பாய்ந்து பாய்ந்து தன் கட்சிக்கு வலு சேர்க்க பார்க்கிறது. மூன்று நாட்களுக்கு முன் வந்த கடிதத்தில் கூட அவர் உடல் நிலையைப் பற்றி தவறாக எதுவும் இல்லையே, ஆனால் சென்னை பொது மருத்துவமனையில் இருந்து இந்த தந்தி வந்திருக்கிறதே என்று அக் குடும்பத்தினருக்கு மனம் அலைபாய்கிறது. அன்று இரவுதான் கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு செல்லும் ரயில். யாருக்கும் நாம் கெடுதல் செய்யவில்லையே, நமக்கு ஒன்றும் தப்பாக நடக்காது என்று கதாநாயகி குஞ்சம்மாளின் அம்மா சொல்லிக்கொண்டே அத்தனை தெய்வங்களுக்கும் மஞ்சள் துணியில் காணிக்கை முடிந்து வைக்கிறார். பூ பழம் வெற்றிலை பாக்கு ஷேம தண்டலம் போன்ற மங்கலப் பொருட்களை பெண்ணிற்கு கொடுத்து நல்ல சகுனம் பார்த்து அம்பி என்ற தன் மகனையும் அவளுடன் சென்னைக்கு அனுப்பி வைக்கிறாள். அம்பி குஞ்சம்மாளின் தம்பி. அவர்கள் வீட்டிலேயே அவள் நல்ல அழகு சிவந்த நிறம் ஒற்றை நாடி தேகம். தலை கொள்ளாமல் பூ வைத்துக்கொள்ள அவளுக்கு பிரியம் அதிகம். இன்று அவள் அதிக அழகுடன் இருக்கிறாள். அம்பி நினைக்கிறான்: சோகத்தில் படரும் ஏக்கம் ஒரு சோ பித்தத்தை கொண்டு வருகிறது, அல்லது அணையப் போகும் சுடர் ஒளிவிட்டு எரிவதைப் போல இவள் இருக்கிறாள். இருட்டு முடிந்து விடாதா, நல்ல வெளிச்சத்தில் நல்ல செய்தி வராதா என்ற தவிப்பு இருவருக்குமே. கதாநாயகி தன் கணவனுக்கு தன் மீது கோபம், உடனே ஊருக்கு திரும்பி வராத வருத்தம் என்றெல்லாம் காரணங்கள் கற்பித்து தன் வாழ்க்கையை பற்றி தம்பியிடம் சொல்கிறாள்.”அவருக்கு பிடிவாதம் ஜாஸ்தி. நான் அழாத நாளில்லை. ஆளாக உயிரோடு இருந்தால் போதும். நான் நோன்பிற்காக இங்கே இருந்து இருக்கக் கூடாது.”என்று சொல்கிறாள்.”என்னை வரவழைக்க பொது மருத்துவமனையில் இருந்து அனுப்பியதாக தந்தி அடிக்க முடியுமா?”என்றும் கேட்கிறார். அம்பி நினைக்கிறான் அப்படி எல்லாம் தந்தி அடிக்க முடியாது என்று எனக்குத் தெரிந்திருந்தும் நான் அதை அவளுக்கு சொல்ல முடியாதல்லவா? வண்டி அசுர வேகமாகவும் நிதானமாகவும் ஒற்றை விளக்கை பாய்ச்சிக் கொண்டு இருளைப் போக்க வந்த ஒளி தேவன் போலவும் காலனின் தூதுவன் போலவும் தென்படுகிறது. சிறுசிறு ஸ்டேஷன்களில் மனிதர்களை பிசாசுகள் போல் இறங்கி ஏறுகிறார்கள். நடுராத்திரியில், ஒரு மணிக்கு விழுப்புரம் ஸ்டேஷனில் நகரத்தார் இனத்தைச் சேர்ந்த இளம்பெண் தன் பெண் குழந்தையுடன் வைர நகைகள் அணிந்து இவர்கள் இருக்கும் பெட்டியில் ஏறுகிறார். நடுராத்திரி வைர நகை இளம்பெண் இப்போது நினைத்தே பார்க்க முடியவில்லை. சிறுசிறு பேச்சுவார்த்தைகள் பின்னர் அந்தப் பெண் ஓலைக்கொட்டான் இலிருந்து மல்லிகை பூச்சரத்தை கதாநாயகிக்கு கொடுக்கிறார். அவ்வளவுதான், குஞ்சம்மா நெகிழ்ந்துவிடுகிறார். இயல்பாக பேசத் தொடங்கி பின்னர் கவலையுடன் பயணிக்கையில் இப்படி எல்லாம் கலகலப்பாக இருப்பது குற்றமோ என்று மனம் கலங்கி அமைதியும் ஆகிறார். செங்கல்பட்டு வந்துவிட்டது. எழும்பூரில் அவள் கணவன் இவர்களை அழைத்துக்கொண்டு போவான் என்ற எண்ணம் ஒரு பக்கம் தலை தூக்கினாலும் மறுபக்கம் இந்த விடியல் என்ன செய்தி வைத்திருக்கிறதோ என்ற கவலையும் அவர்களைத் இந்த தொடங்குகிறது. இருளைப் போல கவலை பின்தங்கி விடாதா, நிம்மதி காலையைப் போல அங்கு எங்களை வரவேற்காத என்ற எண்ணம் பின் தங்கி விட புலரும் காலை என்ன கலக்கத்தை கொடுக்க போகிறதோ என்ற எண்ணம் மேலோங்குகிறது. எழும்பூர் ஜங்ஷனில் யாரும் இல்லை அதாவது அவள் கணவன் இல்லை வேறு யார் யாரோ இருந்தார்கள். வீட்டிற்குப் போனால் அது பூட்டி இருக்கிறது. ஜிஹெச் செல்கிறார்கள். முடிவு தெரிய தவிப்பாக இருக்கிறது. அவ்வாறு அரை மணி நேரம் தவித்த பிறகு”அந்த க்ஷய ரோக கேசா? அவர் நேற்று இரவு இறந்துவிட்டார். நீங்கள் சில பார்மலிடீஸ் முடிந்தபிறகு உடலை பெற்றுக் கொள்ளலாம்.”என்ற செய்தி விடியுமா என்ற தவிப்பை போக்கி விடிந்தே விட்டது என்கிற நிலைப்பாட்டை எட்டுகிறது.
கதை சொல்லும் விதத்தில் எண்ண ஓட்டங்களை கதைக்குள் சுலபமாக ஆசிரியர் கொண்டுவந்துள்ளார். அந்தக்கால சமுதாய சூழல்கள், மங்கலப் பொருட்கள், சகுனம் பார்ப்பது, பூ வைத்துக்கொள்ளும் பெண்களின் ஆசை, இயல்பாகப் பேசிக்கொண்டிருக்கும்போதே சமூகம் என்ன நினைக்கும் என்று வலிந்து கவலையை சுமக்கும் பெண்கள், கணவனின் ஆதிக்கத்தில் கலக்கமமுற்றாலும், ஆளாக அவர் இருக்க வேண்டும் என்று வேண்டுதல், பொது மருத்துவமனையின் பெயரில் தந்தி அடிக்க முடியுமா என்று கேள்வி கேட்கும் குழந்தைத்தனம், அதை மீறும் அறிவு, ஆனாலும் அந்தப் பேதமையை கெடுக்க விரும்பாத அம்பி, முடிவு தெரியும் வரை கலக்கம் பின்னர் ஒரு அமைதி என்று அழகான வலைப்பின்னல்கள் இக்கதை முழுதும் நாம் பார்க்கலாம். சிறு வாக்கியங்கள் மனித மனத்தின் கோட்டோவியங்கள்.