இலக்கிய இன்பம் 30/கோவை எழிலன்

என் நெஞ்சம் இடிபட்டதே

பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்ட சிவபெருமானின் திருவிளையாட்டை புது கண்ணோட்டத்தில் பார்க்கிறது இப்பாடல்.

நான்மாடக் கூடலாம் மதுரையில் வைகை ஆற்றுக்கு கரையெடுக்கச் சென்று இறைவன் பொன்னான மேனி புண் கொள்ளுமாறு அடி பெற்ற செய்தியை ஆயிரம் ஆண்டுகள் கழித்துக் கேட்கும் எனக்கே நெஞ்சில் இடி இறங்கியது போல் இருக்கிறதே தமக்காக இறைவன் அடிபட்ட நிகழ்வை நேரில் கண்ட வாதவூரரான மாணிக்கவாசகரின் நெஞ்சம் எவ்வளவு துடித்திருக்குமோ என்று வாதவூரரைப் பாடுகிறது இப்பாடல்.

வள்ளலாரின் அந்த திருவருட்பாப் பாடல் இங்கே

“வன்பட்ட கூடலில்
வான்பட்ட வையை
வரம்பு இட்டநின்

பொன்பட்ட மேனியில்
புண்பட்ட போதில்
புவி நடையாம்

துன்பட்ட வீரர்அந்
தோவாத வூரர்
தம் தூய நெஞ்சம்

என்பட்டதோ? இன்று
கேட்ட என் நெஞ்சம்
இடிபட்டதே”