கம்பன் கவியமுதம்—30/வளவ. துரையன்

                        ஏற்றுமதி வணிகம்

முறைஅறிந்து அவாவை நீக்கி முனிவுழி முனிந்து வெஃகும்
இறைஅறிந்து உயிர்க்கு நல்கும் இசைகெழு வேந்தன் காக்கப்
பொறைஅறிந்து உயிர்க்கும் தெய்வப் பூதலம் தன்னில் பொன்னின்
நிறைபரம் சொரிந்து வங்கம் நெடுமுதுகு ஆற்றும் நெய்தல்

[அவா=ஆசை; முனிவுழி முனிந்து=சினம்கொள்ளவேண்டிய இடத்தில் சினந்து; இசை=புகழ்; நிறை பரம் சொரிந்து=அருமையான பொருள்கள் இறக்கி]

கோசல நாட்டில் நடந்த வணிகத்தைப் பற்றிக் கம்பன் கூறுகிறான். வங்கம் என்றால் கப்பம் என்று பொருளாகும். ஆண்டாள் தம் திருப்பாவையின் 30-ஆம் பாசுரத்தில், “வங்கக் கடல் கடைந்த” என்று கப்பலைச் சொல்வார். கோசல நாட்டில் பொருள்கள் மிகுதியாக விளைந்தன. அந்நாட்டில் தங்களுக்குத் தேவையானது போக எஞ்சிய பொருள்களை கப்பல்களில் ஏற்றிச் சென்று ஏற்றுமதி செய்தார்கள். அப்படிப் பல பொருள்களை ஏற்றிச் சென்று இறக்கிய பிறகு அக்கப்பல்கள் தம் பாரத்தைச் சுமந்த வருத்தத்தை ஆற்றி நிற்குமாம்.
சிறந்த நெறிமுறையில் அரசாளும் மன்னன் ஆளுவதால் பாரம் சுமந்த வருத்தம் நீங்கிய பூமிதேவியை அக்கப்பல்களுக்கு உவமையாகக் கூறுவான் கம்பன். கோசல நாட்டில் கடலே கிடையாது. கப்பல்கள் எங்கு வந்தன என்ற கேள்வி எழலாம். சரயு நதியே கப்பல்கள் செல்லும் அளவுக்கு அகலமாகவும், ஆழமாகவும் இருந்ததாம்.
அறநெறியை அறிந்து, பொருளாசையை நீக்கி, சினம் கொள்ள வேண்டிய நேரத்தில் சினம் கொண்டு, மக்களிடம் வரிப்பொருள் இவ்வளவுதான் இருக்க வேண்டும் என அறிந்து பெற்று, தன் ஆட்சியின் கீழ் வாழும் உயிரினங்களிடத்தில் இரக்கம் கொள்கிற புகழ் பெற்ற அரசன் பூமியைப் பாதுகாத்து வந்தான். அதனால் பூமியைச் சுமக்கின்ற தம் பாரத்தை இறக்கி இளைப்பாறுகின்ற பூதேவியைப் போலக் கப்பல்கள் அருமையான பொருள்களின் நிறைந்த பாரத்தை இறக்கிவிட்டு நெய்தல் நிலத்தில் பாரத்தைச் சுமந்த வருத்தத்தை ஆற்றிக் கொள்ளும்.