
நேபாள் பசுபதிநாத் கோவில் மிகப் பழமையானது. 90 களில் நான் போனபோது அதிர்ச்சியடைந்துவிட்டேன். கோவில் பிரகாரத்தில் கஞ்சா/பீடி புகைத்துக்கொண்டிருந்தார்கள். இதை எதிர்பார்க்கவில்லை. விசாரித்ததில் இமயமலை அடிவாரத்தில் வாழும் அகோரிகள் அவ்வபோது கோவிலுக்குள் நுழைந்து இப்படி சேட்டைகள் செய்வார்கள் எனத் தெரிந்து கொண்டேன். காசி விஸ்வநாதர் கோவிலிலும் இவர்களை பார்க்கலாம். இவர்களின் அகோரங்களை காசி மணிகர்னிகா, ஹரிசந்திரா மயானத்தில் பார்த்தால் கிலி எடுக்கும். குமட்டல் வரும். வடநாட்டு றகோவில்களுக்கு சென்றுள்ளேன். மினுக்கும் பளிங்கு கற்கலால் கட்டப்பட்ட கோவில்கள். நடுநாயகமாக பிள்ளையார் உட்கார்ந்திருப்பார். மும்பை சித்தி விநாயகா கோவில் வி.ஐ.பி கோவில். பாலிவுட் பிரபலங்கள், அரசியல்வாதிகளுக்கு விருப்பமான கோவில். வெள்ளை பளிங்கு கல்லுக்கு மத்தியில் பிள்ளையார் வீற்றிருப்பார். கழிவறைக்குள் நுழைந்த மாதிரி உணர்வு வரும். போதாக்குறைக்கு விஐபி கோவில் என்பதால் செண்ட் நறுமணம் தூக்கும். வாழை இலையை பார்க்கமுடியாது. ப்ளாஸ்டிக் கோப்பையில் பிரசாதங்கள். தமிழ்நாட்டு கோவில்களில்தான் புராதன வாசனையை உணரமுடியும். வவ்வால்கள் பறக்கும். எண்ணெய் பசை தூண்கள். துளசி இலைகள் வருடும். இந்த உணர்வு வெள்ளை பளிங்கு கல் கோவில்களில் உணரவே முடியாது. இப்போது இப்படிப்பட்ட கோவில்களையும் தேடித்தான் கண்டுபிடிக்கவேண்டும். தூண்/கோபுரங்களில் ஈஸ்ட்மேன் கலர்களை பூசி ஏதோ கட் அவுட் கோவில்போல் காட்சியளிக்கிறது. சிறு தெய்வங்கள் கோவில்கள் எளிமையானவை. எந்த ஆடம்பரத்தையும் பார்க்கமுடியாது. கிராமப்புறத்தில் தனியாக அமானுஷ்யமாக காட்சியளிக்கும். வெப்பத்தையும் உக்கிரத்தையும் உணரமுடியும். புராதன கோவில்களின் அழகையும் புதிர்த்தன்மையையும் எழுத்தில் கொண்டுவந்தது மௌனி தான். கோவில் பிராகரங்களின் புராதனத் தன்மையையும், அகல் விளக்கின் நிழலையும், காதலையும் இணைத்தவர் . பழம்பெரும் கோவில்களை மௌனி கதைகளில்தான் பார்க்கமுடியும்.
