அன்பு சூழ் உலகு


ஆர் வத்ஸலா

நான் என்னுடன்
எப்பொழுதும்
என் வீட்டில்
வேலைக்காரியும் சமையற்காரியும்
தினப்படி விருந்தாளிகள்
இஸ்திரி செய்பவரின் விஜயம்
அவ்வப்பொழுது
அதே போல
எலெக்ட்ரீஷியன்
பிளம்பர் இன்னபிற

பேசுவேன் மாஸ்க் அணிந்து
இவர்களுடன் அரசியல், சினிமா, சினிமாப் பாடல், பேருந்து பிரச்சினை, விலைவாசி ஏற்றம்

பல சமயம்
தம் வீட்டுப் பிரச்சினையை கூறுவார்கள்
கேட்டுக்கொள்வேன் தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு
சில சமயம் கேட்பார்கள் ஆலோசனை
முடிந்தால் சொல்வேன்
சில சமயம் தீரும்
பிரச்சினை
இல்லையெனில்
செய்வேன் அவர்களுக்காக பிரார்த்தனை

என்னை சூழ்ந்திருக்கிறது எப்பொழுதும்
அவர்களன்பு
நான் தரும் கூலியை விட மிக அதிகமாக