வெயில்/ -மதுவந்தி.

                     அடிக்கும்,
                     எரிக்கும்,
                     தகிக்கும்,
                     கொளுத்தும்,
                     வெயில் என 
                     வெவ்வேறு தரங்களில் 
                     சுடுகிற வெயில்தான்
                     நானறிந்தது. 

                     கடற்கரையோ
                      நீரோடும் நதியோ 
                      வாய்க்காத ஊரில் 
                      மழைக்கும், ஈரக் காற்றுக்கும்
                      ஏங்கியபடியேதான் வாழ்வு. 
                     அப்போது,கனவிலும் 
                     நினைத்ததில்லை,இதமாய் 
                     ஒரு கீற்று வெயில் ரேகையாவது 
                     படாதாவென ஏங்கும் காலமொன்று 
                     எனக்கும் வருமென. 

                     உடனிருந்து உயிரூட்டும் 
                     வெயிலின் உண்மை 
                     அம்மாவின் அன்பாய் 
                     பிரிந்தவுடன்தான் தீவிரமாய் 
                     உணர முடிகிறது. 

                     தேசத் தலைநகர வாழ்வில் 
                     எலும்பையும் உறைய வைக்கும் 
                     குளிர் கால நாட்களில்,
                     சூரியனின் இதமான வெம்மைக்கு
                     ஏங்கும் வேளைகளில்,
                     எம் ஊரின் வெளி பூரா விரவிய 
                     வெயிலை மடித்துக் கொணர்ந்து 
                     இங்கே விரித்துப் போர்த்தினால்..?
                     நினைவுச் சூட்டிலேயே
                     மனம் லயித்து
                     வான் நோக்கி நிற்கிறேன். 
                              

3 Comments on “வெயில்/ -மதுவந்தி.”

  1. அற்புதம். தலைநகரக் குளிரில் நாலடுக்கு உடுப்பு அணிந்து, நம்மூர் பூம்பூம் மாடு போல் கனம் தாளாது மூச்சு முட்ட அலைந்தது இப்போது போல் இருக்கிறது. வீடு பூராவும் அடைத்து விடுப்பின் பகல்கள் வேதனையாகக் கழியும் போது எங்கோ ஒரு துவாரத்தில் பெரும்பாலும் சமையலறை எக்ஸாஸ்ட் வழியாகக் கசியும் குளிர் முடங்கிக் கிடக்கும் நம்மை ஐயையோ என்று வாய்விட்டு கதறத் தோன்றும். ஃபிப்ரவரி மார்ச் வாக்கில் திடீரென்று ஒருநாள் வெயில் கிளம்பி நம்மை உருக்குலைக்கும் போது விடைபெற்றுச் சென்ற குளிர் தாபத்தைக் கிளறும். இவ்வளவு குளிரிலும் சரோஜினி நகர் மார்க்கெட்டில் ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்களை நினைத்து நடுங்கினாலும், நாங்களும் ஒருமுறை முயன்று, வெற்றி கண்டதும் சுவாரஸ்யமானது தான். குளிர் ஒரு அனுபவம்.

Comments are closed.