..டர்ட்டி ராஸ்கல்! என் பேரன் வயசிருக்கும்டா ஒனக்கு..!/ஆர்க்கே……!

பணிநிமித்தமாக சென்னைக்கு குடி பெயரும்படி நேரிடும் தென்மாவட்டக்காரர்களுக்கு.. அதிலும் குறிப்பாக மதுரை, தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி, முகவை போன்ற அக்ரஹார இடப்பெயர்ப்பாளர்களுக்கு வசதியான
வேடந்தாங்கல் சரணாலயமே திருவல்லிக்கேணி மேன்ஷன்கள்தான்.
நான்சொல்வது ஏறத்தாழ முப்பது முப்பத்தைந்து ஆண்டுகால கொசுவர்த்திச்சுருள் flash back.


இப்போது allout liquid போல flash back techniqueம் மாறியிருக்கிறதோ என்னவோ..!
அல்லிக்கேணி பேச்சிலர்ஸ் பாரடைஸ் என்றால் அது மிகையில்லை.
ஒரு “சீரான” (சார்! முதல் எழுத்து “சீ”யில் துவங்குகிறது.. “B” யில் அல்ல) இளம் வாலிப பிரம்மச்சாரிக்கு உகந்த சகல சௌகர்யங்களும் சௌக்யங்களும் வெகு அருகில்.
மெரினா பீச்சா.ஒரு நடை..மிளகா பஜ்ஜி, சிலு சிலு காத்து, இளவட்ட நடமாட்டங்கள், சிரிப்பொலி ஓட்டங்கள்.


அப்புறம் பாச்சா (அட நம்ம பார்த்தசாரதி கோயில்தான்) கோயில் ,பெரிய தெரு பிள்ளையார் கோவில் திருவட்டீஸ்வரன் பேட்டை சிவன் கோயில் என பக்தியில் முக்குளிக்கலாம்.


ஸ்டார், சித்ரா, பாரகன், பிளாஸா,


கேசினோ,கெயிட்டி ,பைலட் (ப்ரூக் ஷீல்டின் ப்ளூ லாகூன்,ஜேம்ஸ் பாண்ட்,
ஹரிஸன் ஃபோர்டின் raiders of the lost arc வரிசைப்படங்கள்) கொஞ்சம் ரோடுகளை குறுக்கு வெட்டி நடந்தால் சாந்தி வெலிங்டன் அலங்கார் மிட்லண்ட் ஆனந்த் சபையர்..என தியேட்டர்களின் அலைவரிசையில் அனைவரின் படங்களும் அணிவகுக்கும்..!


சுகமான சுவையான சாப்பாட்டிற்கு அசத்தலான மெஸ்கள். சைடோஜி மெஸ் ,இந்திரா பவன், மித்ரா பவன், நடராஜய்யர் மெஸ் *(பாவம் இவர்..ஊருவிட்டு சோறுவிட்டு இங்க வேலைக்காக வந்து நாக்கு செத்துப்போயிருக்குங்களேன்னு இவருக்கு பசங்ககிட்ட கரிசனம் ஜாஸ்தி.

பசங்க கேக்கறாங்கன்னு மெனுவுல மாவடு பைனாப்பிள் ரஸம் கருவடாம் சுக்கங்காய் வற்றல்னு பார்த்து பார்த்து போட்டே நொடிச்சுப்போனவர்)..!

காசிவிநாயகா மெஸ்..என nvக்கு போட்டியாக அணிவகுக்கும் சைவ மெஸ்கள்..!
நானிருந்த இந்திராபவன் பெரியதெரு பிள்ளையார்கோவிலுக்கு நேரெதிர். குடியிருப்போர் பெரும்பாலும் ஒரே ரகம்.

செவ்வாய், வெள்ளி காலை மாலைகளில் லாட்ஜின் மொட்டைமாடியில் ரங்கநாதன் தெரு இட நெருக்கடி ஏற்படும். காலையெனில் டீக்கான டிரஸ்கோடுடன் பேச்சிலர்கள் “பேச்சிலர்”களாகி அவரவர்க்கான அழியாத கோலங்களை மனதிற்குள் வரைவார்கள்.
மாலை கடக்கும் முன்னிரவுகளில் லுங்கி துண்டு, சிகரெட் கங்குகள் ஒளிவிட எதிர்த்தாற்போலிருக்கும் இளம் தாவணியர்களுக்கு முகம் தெரியாது என்கிற மனோதைரியம் லாட்ஜர்களுக்கு.

Eb ல் வேலைபார்த்த சீனியர் ஒருவர் தாவணிகளின் இடம் முகவரி ஜாதகமே வைத்திருப்பார்.( ” அதோ மாநிறத்துல பச்சை தாவணி மேல கைபோட்டுண்டு போறாளே அவ மஞ்சுளா. நீலி வீராசாமி தெரு, பச்சைத்தாவணி நிம்மி சைடோஜி தெரு” என்பார்)

நாங்கள் இருக்கும் சேவல் பண்ணையின் உள்ளே நுழைந்தால் இடதுபுறம் வரிசையாய் பத்து அறைகள்.. வலதுபுறம் குளியல் ,கழிப்பறை, துவைக்குமிடம் gap விட்டு நான்கே ரூம்கள்.மேன்ஷனின் பொறுப்பாளன் வேலையாள் எல்லாமே பெருமாள்தான். மனசுவிட்டு சத்தமாய் சிரிப்பான்.அதற்காக பிறகு மேன்ஷன் ஓனர் வைத்தியநாத அய்யரிடம் ஏண்டா இந்தக் கத்து கத்தறேனு திட்டு வாங்கா நாளிருப்பின் அது அவன் அதிர்ஷ்ட தினம்.

முதல் ரூம், பத்தாவது ரூம் இந்த இருவர் மட்டும்தான் சீனியர்மோஸ்ட் மேன்ஷன் வாசிகள். ஒருமுறை “எத்தனை வருஷமா இருக்காங்கடா இவங்க?” எனப் பெருமாளைக்கேட்டபோது..”தெரியாது அம்பி ஸார்!(நான்தான்)..! வீட்ல கோச்சிக்கிட்டு சின்னவயசிலே ஓடிவந்து நான் இங்க சேர்ந்தப்பலேர்ந்து இங்கதான் இருக்காங்க”எனச் சொன்ன பெருமாளுக்கு அப்போது இருபதுவயது.. அவனுக்கு எல்லோருக்குமே நான் அம்பிஸார்தான்.

அம்பி என் தோற்றத்திற்கு. ஸார் என் வங்கிப்பணிக்கு என இனம் பிரித்து பொருள் கொள்க.!

ஓனர் வைத்தியநாதய்யர் எப்போதாவது நோட்டமாய் விஜயம் செய்யும் marchpast ன் போது அவரே உரிமையாய் அறைக்குள் சென்று பேசும் ஸ்பெஷல் மரியாதை இவர்கள் இருவருக்கும் மட்டுமேயானது..!

முதல் ரூமாளி ரிட்டயராகி இரண்டு மூன்று வருடமிருக்கும். பத்தாமிடம் 75 வயசுக்கு மேல். அந்தக்கால பிரிட்டிஷ் இங்கிலீஷ்.அந்தக்கால s s l c வேறு.

அவர் நடக்கையில் தாங்கிச்செல்லும் ஊன்றுகோலைவிட ஒல்லியாய் இருப்பார்.கண்ணாடி விலக்கிய பார்வை தீக்ஷண்யம். பாம்புச்செவி. கம்பீரக்குரல். அவரும் ஒண்ணாம் நம்பர் ரிஷிக்கும் ஏழாம் பொருத்தம். எப்பொழுதும் tom and jerry பாணி சண்டைகள்தான். ரிஷி திருமணம் செய்துகொள்ளவில்லை பெயருக்குத்தக்கபடி. அரிதாக மட்டுமே அவர் அறைக்கு உறவினர் வருகை. பெருமாள் லாட்ஜுக்கான பொது ஹிண்டுவை யாருக்கு முதலில் தருவதில் துவங்கி சுத்த ஆங்கிலத்தில் மொத்த சண்டையும் நடக்கும் காலையில்.
நான் மெதுவாக ரூம்மேட்டிடம் “ரூபவாகினியின் பொங்கும் பூம்புனல் ஆரம்பமாயிடுத்துடா!”என்பேன்.

அந்த நேரம் இதற்கு எவனாவது சத்தம்போட்டு சிரித்துவைத்தால் தொலைந்தது. சண்டையை நிறுத்தி tom and jerry இருவரும் ஒன்று சேர்ந்து எங்களைக் குதறிவிடுவார்கள் british englishல்.

ஆனால் அபூர்வமாய் ஒருநாள் அலுவல் நேரம் யதேச்சையாய் நான் என் ரூம் வந்தபோது மேன்ஷன் ரூம்களில் எல்லாம் பூட்டின் ஆட்டம்.

பத்தாம் நம்பரில் ஒரே சிரிப்பு சத்தம். மெதுவாய் எட்டிப்பார்த்தால் உள்ளே ரிஷியும் அவரும்தான். நைசாக வெளியேறினேன் ஆச்சர்யத்துடன்.

காலைவேளைகளில் டக்டக்கென்று தன் ஊன்றுகோல் ஒலிக்க வருவார் பெரியவர்..ஒவ்வொரு அறைவாசலிலும் நிற்பார் ஒருநொடி.
ஒருகனைப்பு..!குரலை உயர்த்தி
“excuse me..can i have the privilege of exchanging some pleasantries with you?”என்பார்.
(ஆரம்ப நாட்களில் ஏதோ கிஃப்ட்டுதான் தரப்போகிறாருக்கும் என ஆவலாய் “sure sir” என்போம்..யாருக்குத்தெரியும் இந்த எழவு பிரிட்டிஷ் இங்கிலீஷ் vocabulary.?!.) “good morning.!have a nice day!”என்றபடி அடுத்த அறைக்கு நகர்வார்.
இப்படித்தான் ஒருநாள் அவரின் அந்த தனியான குரலாலும் துல்லியமான ஆங்கிலத்தாலும் அன்று வந்தது எனக்கு வினை.

அன்று அறைவாசல் பார்த்த அறைவட்டமாய் என் நண்பர்கள் அமர்ந்திருக்க அன்று சனி(எனக்கும்தான்) மத்தியானம்.! உணவிற்குப்பின் அவர் உறங்கும் நேரம்.அவர் நடப்பது கனைப்பது அவரின் can i have the..
english என மிமிக்ரி செய்ய நார்மல் ரெஸ்பான்ஸை விட அளவுக்கு அதிகமாய் இன்மேட்கள் சிரிக்க அதிலொருவன் சைகை காட்ட பின்னால் திரும்பினால் சத்தமில்லாமல் பின்னால் பெரியவர்.


என் கெட்ட நேரம் அதை அவர் கேட்ட நேரம்.
” யூ ப்ளாக் கார்ட்.!.டர்ட்டி ராஸ்கல் ..!யூ ஸ்டுப்பிட்..!இமிடேட்டிங் மீ…யூ ஸ்கௌன்ட்ரல்.. !என் பேரன் வயசிருக்கும்டா ஒனக்கு..யூ லிட்டில் ப்ராட்!”என தீஜ்வாலையாய் ஆங்கிலம் கக்கினார். ஏனோ அன்று எனக்கு ஸாரி சொல்லவும் தோன்றவில்லை. அவசரத்தில் “ஸோ வாட்?” என்றுவேறு கேட்டுவிட்டேன். அவ்வளவுதான்..கம்பை ஓங்கியபடி கர்ஜித்தார்.” i will see to it that you vacate your room tomorrow itself.you will stay in platform from tomorrow”எனக் கொதித்தார். பெருமாள் அவரை சமாதானப்படுத்தி அவர் அறைக்கு நடத்திச்சென்றான்.


அவர் அறையிலிருந்து ஆங்கிலத்தில் என்னைத்திட்டும் வார்த்தைகள் காற்றில் உழன்று கொண்டிருந்தன..!
மறுநாளிலிருந்து அவர் புழங்காத சமயங்களில் என் நடமாட்டங்களை அமைத்துக்கொண்டேன். என் ரூமிற்கு மட்டும் morning pleasantries வருவதில்லை..
ஒருவாரமிருக்கும்.. யதேச்சையாய் அவர் எதிரே வர “ஸாரி ஸார்” என்றேன்.. “ம்ஹ்ஹ்ம் “என்றபடி பிரம்மஹத்தியை பார்த்தமாதிரி சட்டென தன் ரூமிற்கு திரும்பிவிட்டார்.
பெருமாள் என்னைத் தேற்றினான்.


“விடுங்க அம்பிஸார். !அவர் அப்படித்தான்.


புசுக் புசுக்குனு கோவம் வரும்.இங்கிலீஷ்ல பொளந்து கட்டி என்னையே திட்டுவார்.எனக்கு எதுவும் புரியாது. பேசாம தலய குனிஞ்சுகிட்டு நிப்பேன்..போய் காப்பி வாங்கிட்டு வாடாம்பார்.அவரோட ஒரே பையன் பெங்களூர்லேர்ந்து மூணு நாலு வாட்டி கார் வச்சு கூட்டிகிட்டு போனாலும், ஒரு வாரம் பத்து நாள்ல திரும்பிடுவார். எதிர்த்த பேங்கல பென்ஷன் அக்கவுண்டுருக்கு..ஓனர்கிட்ட சொல்லி பத்தாம் நம்பரை அவருக்குனு வச்சிக்கிட்டார். இந்த மாதிரி சண்டை போட்டாதான் அவர் எப்பவும்போல இருக்கார்னு அரத்தம்” என்றான் ஞானியைப்போல.
ஒரு லீவுநாள்.

மதியம் நடராஜய்யரிடம் உணவை முடித்து மேன்ஷன் வருகையில் பத்தாம் நம்பரில் ஒரே கூட்டம்..”எல்லாரும் நகர்ந்து காத்த வரவிடுங்கோ”னு ஓனர் வைத்தியநாதய்யர் கத்திக்கொண்டிருந்தார்.ஆம்புலன்ஸ் இல்லாத காலம் அது.
எட்டிபார்த்தேன்.கட்டிலில் பேச்சு மூச்சின்றி துவண்டுகிடந்தார்.வாய் ஆவெனத் திறந்திருந்தது. வாசலில் கருப்பு மஞ்சள் அம்பாஸடர் டாக்சி.
நான், பெருமாள், சடகோபன் மூவருமாய் அவரைத்தூக்கி காரில் ஏற்றினோம்.”என் வாக்கிங் ஸ்டிக்!”என்றார் என் காதருகில் ஹீனமாய்.

ஓனர், பெருமாள், ரிஷி பெரியவருடன் ஏறிக்கொள்ள ராயப்பேட்டை ஜி ஹெச் போனது கார்.

மேன்ஷன் அறைவாசல்கள் அவர் குட்மார்னிங் இல்லாமல் பத்து நாளாகியிருக்கலாம்..வாசலில் கார் ஹாரன் ஒலி..ஓடினேன் வாசலுக்கு..!
கார் கதவு திறக்க பெருமாள், ஓனர், பெரியவர் அவரைத் தாங்கியபடி அவரைப் போலவே இருந்த அவர் மகன். ஐம்பது வயதிருக்கலாம் அவர் மகனுக்கு!
“என்னதான் ஆச்சு ஸாருக்கு?” என்றபடி அவரிடமிருந்து பெரியவரை என் தோளுக்கு மாற்றிக்கொண்டேன்.

“மூச்சிறைப்பு ஆஸ்த்மா சளி.எல்லாம்தான்.. இப்ப தேவலை.
பெங்களூர்க்கு போலாம் வான்னா..பத்தாம் நம்பருக்கு கூட்டிண்டு போன்னு ஒரே பிடிவாதம்.
அதான்…!”
நானும் பெருமாளும் சேர்ந்து அவரை அலாக்காக தூக்கி ரூமிற்கு சுமந்துவந்தோம். என் தோளில் கை போட்டுக்கொண்டார்..

மகன் படுக்கையைத் தட்டி ரெடி பண்ணி மின்விசிறி சுழல விட்டார்.தோளிலிருந்து அவர் கையை விலக்கி தலையணையில் படுக்க வைத்தேன்.

வாக்கிங் ஸ்டிக்கை அவர் பார்வையில் படும்படி வைத்தேன்..

“இப்போ எப்படி இருக்கேள் ஸார்..” என்றேன் அவர் குரல்போல் மிமிக்ரி செய்து.! அவர் கண்கள் லேசாக பனித்திருந்தது எனக்குத் தெரிந்தது.
கிட்டே அழைத்தார்..குரலின் ஒலி அளவு வழக்கத்தைவிட சற்றே குறைந்து..ஆனால் அவரின் பிரத்யேக கம்பீரம் குறையாமல் சொன்னார்.
,”ஒனக்கு தேங்ஸ்ல்லாம் சொல்ல மாட்டேன்..!யூ டர்ட்டி ராஸ்கல்.. !என் பேரன் வயசிருக்கும்டா ஒனக்கு!”

“அப்டின்னா நாளைக்கு கார்த்தால என்ரூம் கதவத்தட்டி ..டர்ட்டி ராஸ்கல்..குட்மார்னிங்னு சொல்லுங்கோ”என்று சிரித்தேன் நான்.

2 Comments on “..டர்ட்டி ராஸ்கல்! என் பேரன் வயசிருக்கும்டா ஒனக்கு..!/ஆர்க்கே……!”

  1. அந்தக் காலத்தில் மனிதாபிமானம், மனிதாபிமானம் என்று ஏதோ ஒன்று இருந்ததைப் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். நீங்களும் சொல்லிவிட்டீர்கள்..!

  2. எழுபதுகளில் எனக்கிருந்த திருவல்லிக்கேணி மான்ஸன் வாச நண்பர்களை நினைவுக்கு கொண்டுவந்த அம்பியின் கொசுவர்த்திச் சுருள் புகையை (சு)வாசித்தேன். அட..நறுமணம் வீசுகிறது ஆர்கே..

Comments are closed.