என் அன்பிற்கினிய கவிஞர் ஞானக்கூத்தன் அவர்கள் எனக்கெழுதிய கடிதம்/ஐயப்ப மாதவன்

என் அன்பிற்கினிய கவிஞர் ஞானக்கூத்தன் அவர்கள் எனக்கெழுதிய கடிதம் இன்று என் கண்ணில் பட்டது உங்களது பார்வைக்கும்.

அன்புள்ள நண்பருக்கு,

வணக்கம். நீங்கள் அனுப்பி வைத்த கவிதைத்தொகுப்பு ’ஆப்பிளுக்குள் ஓடும் ரயில்’ கிடைத்தது. கவிதைகளை நிதானமாகத்தான் படிக்கவேண்டும் என்று சில கவிதைகளைப் படித்ததுமமே புரிந்தது. அண்மைக்காலத்தில் கவிஞர்கள் மேற்கொண்டிருக்கும் ஒரு நடையில் உங்கள் கவிதைகள் இயங்கும்போதே சில ஒதுக்கங்களையும் பார்க்க முடிகிறது. வியப்புடன் படித்துக்கொண்டே போக ’மாமிசம்’ என்ற கவிதை மனதை நெகிழ வைக்கிறது. முதல் பத்தியின் கடைசி வரியான ‘சிவந்து கிடக்கிற அந்தி’ என்பது பொருட் செறிவுடையதாகிறது. அந்தி, செந்நிறம் என்பவை கவிதையை அதன் தொடக்கத்திலேயே உறுதியாக்குகின்றன. அந்தியேஷ்டி என்பது ஈமச்சடங்குகளைக் குறிக்கும் வடசொல். நமது கவிதைகளில் இது தொடர்ந்து இடம் பிடித்து வருகிறது. சிலர் துட்டி என்று எழுதுகிறார்கள். கவிதையின் நான்காவது பத்தி கவிஞனின் திறமை கலந்த நவிற்சியினும் வெளிப்படும் என்பது மகிழ்ச்சி தருகிறது.

மாமிசம், புனைவில் தொடுபுலம், காற்றின் மீதே உறங்குகின்றனர், முன் வாசல் வரை வந்திருந்தவர்கள், நதியோடிய கவிதாவின் முகம், வால்குழந்தை, மரவுடல் அத்துமீறல், ஒரு விதை ஓர் ஆரண்யம், பிரிவைச் சொல்லும் அந்தி நிறங்கள், இயற்கை சிறகசைப்பு, காலம் காண்பிக்கிற சித்திரப்பெண், முதலான கவிதைகள் இரண்டாம் முறை படிக்கத் தூண்டுகின்றன.

மூடிய கண்களுக்குள் என்ற தொடர் சில்வியா பிளாத் கவிதை ஒன்றை நினைவில் கொண்டு வருகிறது. கண்களை மூடிக்கொண்டு என்ற வகையில் தெலுங்கில் என் நண்பர் சிவா எழுதிய கவிதை ஒன்றும் உண்டு. எல்லாம் ஒன்றைப்போல் ஒன்று நன்றாக அமைந்தவை.

உங்கள் சிறுகதைகளும் நன்றாக அமைந்திருந்தன என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் கூற விரும்புகிறேன்.

கவிஞர். ஞானகூத்தன்,
சென்னை 107
07.02.2012