கவலை இல்லாத வள்ளலாய்/ மீ. விசுவநாதன்

மாமழை கொட்டித் தீர்த்தது

இருகரை தொட்டுப் பாய்கிறது
ஆற்றில் வெள்ளம்

ஆற்றுப் பாலத்தின்
மேலாகத் தண்ணீர் வழிந்தோடுகிறது
மக்கள்
ஆச்சர்யமாக
ஆற்றின் கரையில் நிற்க

பல நூறு பறவைகள்
நீர்க்காக்கைகள், கொக்குகள்
குருவி, மைனாக்கள், காக்கைகள்
குதூகலமாகப்
பறந்து கொண்டிருக்கிறது
இக்கரைக்கும் அக்கரைக்குமாக

விலாங்கு மீன் என்று தூக்கிய
கழுகின் கால்களின் உடும்பும்
சின்ன மீனுக்குக்
குறிவைத்த
செங்கால் நாரையின் வாயில்
கருநாகப் பாம்பும் நல்ல வேட்டை

கரையோரம் ஒதுங்கிய சில
சந்தனக் கட்டை உருளைகளை
பக்குவமாகக் கடத்துகிறான் ஒருவன்

இந்தக் களேபரத்திலும்
மண்டபத்தில் மேலிருந்து
ஒரு வாலிபன் குதித்து நீந்துகிறான்

வெள்ளம் வடிந்தது

வண்டி வண்டியாய் மணல்
சுறண்டப் பட்டு
அள்ளிப்போகிறது
அழுக்குப் படாத வெள்ளை வேட்டி.

நன்மையோ தீமையோ
கவலை இல்லாத வள்ளலாய்
நதியில் நீர் தெளிந்து ஓடுகிறது

தேவைப்படும் போது
நதி கேட்காமலேயே
பெய்யெனப் பெய்யும் மழை.

(03.02.2021 18.19 pm)