கடலில் வீசப்பட்ட சட்டை../அழகியசிங்கர்

துளி – 240

இரண்டு விஷயங்களை நான் ஞாபகப்படுத்துக் கொள்வேன். அறிஞர் அண்ணா இறந்தபோது ஆல் இந்தியா வானொலியில் கலைஞர் வாசித்த வசன கவிதை. அதை என்னால் மறக்க முடியாது. அப்போது நான் பள்ளிப் படிக்கும் சிறுவன்.

இரண்டாவது அண்ணா சமாதியைப் பார்க்கப் பள்ளி நண்பர்களுடன் மெரினா சென்றது.

என் வீட்டில் சொல்லவில்லை. அண்ணா சமாதியைப் பார்க்கப் போகிறேன் என்று.

பள்ளிக்கூட நண்பர்களுடன் சென்றேன். அண்ணா சமாதியைப் பார்த்தபிறகு மெரினா கடற்கரைக்குப் போனோம். என் சட்டை அலையில் நின்று கொண்டிருக்கும்போது நனைந்து விட்டது.

நான் சட்டையைக் கழற்றி ஈரம் போகப் பிழிந்து கொண்டிருந்தேன். என் பக்கத்தில் தண்ணீரைப் பார்த்துக் கும்மாளம் அடித்துக்கொண்டிருந்த என் வகுப்பு மாணவர்கள், என் சட்டையைப் பிடுங்கி பந்து போல் சுருட்டி தூக்கிப் போட்டு விளையாடினார்கள்.

என்ன செய்வது என்று தெரியவில்லை. அவர்களிடமிருந்து சட்டையைப் பெற முயற்சி செய்தேன். அவர்களோ சட்டையை அலையில் தூக்கிப் போட்டார்கள். சட்டைப் போயிற்று.

நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை இந்த விளையாட்டை. சட்டையில்லாமல் நான் வந்து கொண்டிருந்தேன். தங்கசாலையில் என் வீடு இருந்தது. அதுவரைக்கும் பீச்சிலிருந்து நடந்து வந்து கொண்டிருந்தேன். யார் என்னைக் கூப்பிட்டார்கள்? எதற்குப் போனேன் என்று தெரியவில்லை. கையில் சில்லறை இல்லாமல் நடந்தே போனேன். குளிரில் நான் நடந்து வந்து கொண்டிருக்கும்போது ஒரு போலீஸ்காரர் என்னைக் கூப்பிட்டார்.
எனக்கு போலீஸன்றால் பயம். கிட்டே சென்று “என்ன?” என்று கேட்டேன்.
“நீ ஏன் இவ்வளவு ஒல்லியாக இருக்கே.. தினமும் ஒரு முட்டை ஒன்று சாப்பிடு” என்றார்.
“சரி” என்று தலை ஆட்டிவிட்டுச் சென்றேன்.
வீட்டிற்கு வருவதற்கே பயம். அம்மா கண்டுபிடித்துத் திட்டாமல் இருக்க மாட்டாள். அன்று அம்மா கண்ணில் படாமல் தப்பி விட்டேன்.
அண்ணா சமாதியைப் பார்க்க ஏன் போனேன். யார் என்னைக் கூப்பிட்டார்கள். சட்டையை எப்படித் தவற விட்டேன் என்பது தெரியவில்லை.
ஆனால் இந்த நிகழ்ச்சி மட்டும் அண்ணாவை நினைக்கும்போது தோன்றிக்கொண்டே இருக்கும்.