
பிஞ்சுக் கைகள் காற்றில் அலைகின்றன
அம்மா பாடுகிறாள்:
“ என்ன தவம் செய்தனை
தாயே யசோதா
எங்கும் நிறை
பரப்பிரம்மம் உன்னை
அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை”
நடை பயிலும்
தளிர் கால்கள்
தத்தித் தத்தி ஓடி
தடுக்கி விழுகின்றன
ஒற்றை மயில் பீலி
விண்ணேகி
பிரபஞ்ச விழியாய்
பார்த்து நிற்கிறது
பொக்கை வாய்
நாக்குக் குழற
முதற் சொல்லை
ஓசை கூட்டும் குழவி
கண்ணில் நீர் மல்கித் தவிக்கிறது
