காலைப்பொழுது…./அனங்கன்

சுருண்டுவிழும்
காலைநாளிதழ்
கதவைத்தட்டும்.

கதவில் மாட்டிய
மஞ்சற் பையில்
ஆவின் சொட்டும்.

அணைக்கமறந்த
தொலைக்காட்சிப்பெட்டி
தன் வண்ணம் காட்டும்.

இரவில் தாமதமாக
தூங்கிய விழிகள்
எரிச்சலைக்கொட்டும்.

குளிர்சாதனப்பெட்டியில்
புளித்தமாவு
நாசியை முட்டும்.

நேற்றையஉணவு
நுரைத்துப்போய்
உள்ளில் குமட்டும்.

வேலைக்குசெல்லும்
நேரம் கடப்பதை
நொடிமுள் சுட்டும்.

சீனஉணவை
அவசரத்தேவையில்
பெண்மை நீட்டும்.

குளிக்காத உடலுக்கு…
வாசனைத் திரவியம் நறுமணம் கூட்டும்.

அவசரப்
பொழுதில் தேவை இன்று
கைபேசி மட்டும்.

இரவுமுழுதும்
கொட்டிய செய்தியை
ஔித்திரை காட்டும்.

மழலைகள் ஏதும்
இருந்தால் நிலையோ
இன்னும் வாட்டம்.

வாகனப்புகை
மூட்டத்தின் ஊடே தினமும்
இதுபோல் ஓட்டம்.

காலைக்கதிரைக்
காணாதது இன்றைய
இளமைக்கூட்டம்.

                     .