குடை…/கு.மா.பா.திருநாவுக்கரசு

குடையைப்
பாடுபொருளாக வைத்து
கவிதை வேண்டுமா?
குடைக்கு
‘கவிகை’ என்றொரு
பெயர் உண்டு! – அது
‘கொடை’ என்ற பொருளும்
தருவதுண்டு!
வெண்கொற்றக் குடை
வேந்தனின்
வெற்றிக்கு அடையாளம்! – அதை
வெண்கொற்றக் கொடையாக
மாற்றிப் பிடித்தவன் கர்ணன்!
கோகுல மாந்தரைக் காக்க,
கோவர்த்தன மலையையே
குடையாக்கியவன் கண்ணன்!

மழை வந்தால்
மனிதர்கள் மட்டுமா
குடை ஏந்துகின்றனர்?
மரங்களும் கூட
குடைகளாகின்றன!

தாத்தா விட்டுச்சென்ற
வளைந்த மூங்கில் பிடிகொண்ட
சல்லடைப் பொத்தல்களுடன்
மழைக்காலத்தில் மட்டும்
தலை நீட்டி…
தன்னை மட்டுமல்ல! – அதைத்
தாங்குபவனின் தலையையும்
நனைத்துக் கொண்டு…
மரங்களும் குடைகளாகின்றன!

நேற்றடித்த மழைக்கு
இன்றும் குடைப் பிடிக்கின்றன
மரங்கள்! – அதன்
மேனியெங்கும் பூத்தன
நாய்க்குடைகள்!


  • நாள்: 6/2/2022