கனவில் தோன்றிய கதை – 3/எல்.ரகோத்தமன்


 
கலெக்டர்
 


என் அம்மா சில நாட்களாக என் கனவில் வந்த வண்ணம் இருக்கிறாள். அதுவும் முக்யமாக நேற்றைய கனவில் வந்து, எல்லா பாடங்களிலும் 90 மதிப்ப்பகண்களுக்கு மேல் எடுத்தால், ஸ்போர்ட்ஸ் சைக்கிள் வாங்கித்தருவதாகச் சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  என் உற்ற நண்பனிடம் என் அம்மா கனவில் வருவதை மனதாற சொல்லிக்கொண்டேன். ,, நண்பன்  அதை மிகவும் ஆவலுடன் கேட்டான். புளகாங்கிதம் அடைந்தான். ஆனால்  நான் மிகவும் குழம்பிப் போயிருந்தேன்.  ஏனெனில் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இந்த  ஆஸ்ரமத்திலே தான் வாசம் செய்கிறேன்  ஆஸ்ஸ்ரமம் சார்ந்த பள்ளியிலேயே படிக்து வருகிறேன்.  என் நண்பனும் அப்படியே.  இருவருமே எங்கள் தாயைக் கண்டதில்லை.  நீல நிற பட்டுப்புடவை உடுத்தி, மெல்லிய கோல்டன் ஃபிரேம் கண்ணாடி அணிந்து, தலையில் மல்லிகைப் பூ  சூடி ,மிகவும் முகமலர்ந்து  என்னுடன் கனவில் உரையாடிய ஓரிரு வார்த்தைகள் என் மனதில் இன்னமும் சுற்றிச் சுற்றி வருகிறது. அதில் முக்யமானது அந்த ஸ்போர்ட்ஸ் சைக்கிள்.    
             ” உண்மையிலேயே அவர்  என்  அம்மா தானா? “ உறுதியாக தெரியாவிட்டாலும் என்  மனதில் ”அம்மா “ என்றொரு பிம்பம் படர்ந்து விட்டது. ஆம், அவள் என் அம்மா தான் .  அவ்விதமே வரிந்து கொண்டதில்,   இதுவரை கண்டிராத அம்மாவின் மீதான ஏக்கம் மனதில் சுழன்ற வண்ணமே இருக்கிறது.   அதே பெண்மணி ஏன் தினமும் என் கனவில் வரவேண்டும் ?  அவள் என் அம்மா இல்லை என்றால் வேறு யார்? வேறு யாரோ எனில் ஏன் என் கனவில் மீண்டும் மீண்டும் வரவேண்டும்? எனக்கு ஏன் சைக்கிள் வாங்கித் தருவதாகச் சொல்ல வேண்டும்? எனக்கு சைக்கிள் மீதுள்ள மோகம் அந்தப் பெண்மணிக்கு எப்படித் தெரியும்?  யோசிக்க யோசிக்க தலைப் பாரமாகியது. இந்த விஷயத்தை “அண்ணா “விடம் பகிர வேண்டும் போல் இருந்தது. அண்ணா வேறு யாருமல்ல இந்த ஆஸ்ரமத்தை நிறுவி நடத்தி வருவபவர். அவரை அப்படித்தான் எல்லோரும் அன்பாக அழைக்கிறார்கள்.  அண்ணா கொடுத்த ஊக்கத்தில் தான் சைக்கிள் மராத்தானில் சென்ற வருடம் பங்கேற்றேன். பரிசு எதுவம் கிடைக்கவில்லை. என்னை முந்திச் செல்பவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் பாடம் கற்றேன்.  சைக்கிள்களில் இத்தனை வகைகளை அன்று தான் முதலில் பார்த்தேன். இவ்வளவு நிறங்களில், இவ்வளவு வகைகளா என்று பூரித்துப் போனேன். நான் ஓட்டிய சைக்கிள் ஆஸ்ரமத்திற்குச் சொந்தமானது.  பங்கேற்ற சைக்கிள்களை ஒப்பிட்டால் என்னுடையது சுமார் தான். வார இறுதி நாட்களில் அந்த சைக்கிளில் தான் பயிற்சி செய்கிறேன். அண்ணாதான் ஒவ்வொரு வாரமும் என்னோடு சேர்ந்த மற்ற ஐந்து பேரையும் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் கொடியசைத்து அனுப்பி வைப்பார்.  கிட்டத்தட்ட முப்பதிலிருந்து நாற்பது கி.மீ. வரை சென்று திரும்புவோம்.  வியர்வையில் தொப்பலாக நனைந்திருப்போம்.  ஆஸரமத்தை நெறுங்கியதுமே ,அதுவரை எங்கோ ஒளிந்திருந்த பசி வயிற்றைக் கவ்விக் கொள்ளும். சூடான பொங்கலும் பூரியும் கண் முன்னே வந்து  நிற்கும். பசி இன்னும் கூடி விடும்.

நீலப் புடவை கட்டிய என் அம்மாவைப் பற்றி  அண்ணாவிடம் பகிர ஆஸ்ரமத்திலேயே உள்ள அவருடைய அவுட் ஹௌஸ்ஸிற்குச் சென்றேன்.  வீடு பூட்டியிருந்த்து.    ஆஸ்ரம அலுவலகம் சென்று அங்கிருந்த வாசன் சாரை கேட்டேன்.  அண்ணா கலெக்கடரைப் பார்க்கச் சென்றிருப்பதாக விஷயம் அறிந்தேன். என்ன விஷயம் என்று கேட்கத் தோன்றவில்லை. இரவில் சந்தித்துக் கொள்ளலாம் என்று திரும்பி விட்டேன். 

இரவு எட்டு மணிக்கு மேல் அண்ணாவைப் போய் பார்த்தேன். “ வா மனோ.. என்ன விஷயம் ..” என்று முகமலர்ச்சியுடன் வினவினார்.  அவர் முகத்தில் ஏதோ ஒரு சந்தோஷம் நடமாடியது.  அவரிடம் என் அம்மாவைப் பற்றிச் சொல்லாமல் வேறு ஏதேதோ பேசிவிட்டு அறைக்குத் திரும்பினேன்.  எந்த தயக்கம் என்னைத் தடுத்தது என்று என்னால் ஊகிக்க முடியவில்லை. அவரிடம் பேசிக் கொண்டிருக்கையில் ஒரு விஷயத்தைச் சொன்னார். இன்னும  இரண்டு மாதத்தில் ஆஸ்ரமத்திற்கு முப்பது ஆண்டுகள் நிறைவடையப் போவதாகச் சொன்னார்.  அதற்கான விழாவிற்கு கலெக்கடரை அழைத்துவிட்டு வந்ததாகச் சொன்னார்.  கலெக்கடர் உடனே சம்மதம் தெரிவித்து விட்டதையும் சொன்னார்.  நோட்டீஸ் போர்டில் போடும்வரை யாரிடமும் சொல்லவேண்டாம் என்றும் சொன்னார்.  முப்பது வருடமாக  ஒரு ஆஸ்ரமத்தை அர்ப்பணிப்ப்போடு  நடத்துவது எவ்வளவு பெரிய விஷயம்! 

இரவு தூக்கம் பிடிக்கவில்லை. மீண்டும் மீண்டும் வந்து என் அம்மா என்னைத் தீண்டிக் கொண்டிருந்தாள்.  அம்மாவைப் பார்க்க வேண்டும். எங்கே போய் பார்ப்பது? பார்த்தால் என்ன பேசுவது? பேச்சு வருமா? இன்னும்ஏதேதோ கேள்விகள். எப்பொழுது தூங்கினேன் என்று எனக்கே தெரியாமல் தூங்கிப்போனேன்.

ஆஸ்ரமம்  விழாக் கோலம் பூண்டிருந்தது.  ஆஸ்ரம விளையாட்டு மைதானத்தில் பெரிய மேடை அமைக்கப் பட்டிருந்தது.  வாசலில் பேனர்கள் கலெக்டரை  உற்சாகமாக வரவேற்றன. கலெக்டர் ஒரு பெண்மணி. கலெக்டர் என்பதால் பாதுகாப்பிற்கு போலீஸ் வாகனம் ஓரமாய் நிறுத்தப் பட்டிருந்தது.  நான் வந்திருந்த விருந்தினர்களை கவனித்துக் கொள்ளும் பொறுப்பில் உற்சாகமாக ஈடுபட்டிருந்தேன்.  கலகலப்பாகத் திகழ்ந்த விழா அரங்கம், கலெக்டர் வாகன வரிசை ஆஸ்ரமத்தில் நுழைந்ததும்  பட்டாசுகள் வெடிக்க, அண்ணா கலெக்டரை வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றார்.  மேடையில் கலெக்டரைப் பார்த்ததும் துணுக்குற்றுப்போனேன். என் கனவில் வந்த அதே அம்மா.  நீலப்புடவைக்குப் பதிலாக அரக்கு நிறத்தில் புடவை. அதே கோல்டன் ஃபிரேம் கண்ணாடி. மல்லிகைப் பூ.  திரும்பத் திரும்ப உற்று உற்று பார்த்தேன் கலெக்டரை. என் அம்மாவே தான். போய் அழைத்துவிடலாமா என்று தோன்றியது. மனம் கலங்கி ஒரு சொட்டு நீர் கண்களில் திரண்டு விட்டது.. அடக்கிக் கொண்டேன்.  கூட்டத்தின் ஒரு மூலையில் என்னை மறைத்துக் கொண்டேன்.  அண்ணா கலெக்டரை அறிமுகம் செய்ய ஆரம்பித்தார்.  அப்பொழுது தான் தெரியவந்தது  கலெக்டரும் இந்த ஆஸ்ரமத்தில் வளர்ந்து, படித்துப் பெரிய இடம் சென்றவர் என்று.  கலெக்டரின் பூர்வீகம் தெரிந்ததும் என் கனவு அம்மா கலைந்து போனாள். அம்மா ஒரு பிரமை. ஒரு ஏக்கம்.  கலெக்டர் பேசும் பொழுது ஆஸ்ரமத்திற்கு பத்து ஸ்போர்ட்ஸ் சைக்கிள்கள் தன் சொந்த செலவில் இனாமாக அளிப்பதாக உறுதியளித்த போது பாதி கனவு பலித்தது போல் இருந்தது.

06-02-2022