இலக்கிய இன்பம் 32/கோவை எழிலன்

உவமைக்குப் பேர் பெற்ற குறுந்தொகைப் பாடல் இது.

தலைவன் பொருள் ஈட்டியபின் கார்காலம் வருமுன்னே ஊர் திரும்ப எண்ணுகிறான். மூங்கில் போன்ற அழகுடைய பருத்த தோள்களையும், போர் புரியும் அகன்ற கண்களையும் கொண்ட தலைவியின் ஊரோ வெகு தொலைவில் உள்ளது. ஒரே ஒரு ஏரைக் கொண்ட விவசாயி தன் ஈர நிலம் காய்வதற்கு முன் எவ்வாறு விரைந்து செயல்படுவானோ அத்தகைய விரைவை என் மனம் கொண்டுள்ளது. ஆனால் பயணம் அவ்விரைவைக் கொள்ள இயலவில்லையே என்று என் அகம் வருந்துகிறது என தலைவன் கூற்றாக வரும் பாடல் இது.

இப்பாடலெழுதியதால் புலவர் ஓரேருழவனார் எனும் பெயர் பெற்றார்.

“ஆடு அமை புரையும் வனப்பின் பணைத் தோள்
பேர் அமர்க் கண்ணி இருந்த ஊரே
நெடுஞ் சேண் ஆர் இடையதுவே; நெஞ்சே,
ஈரம் பட்ட செவ்விப் பைம் புனத்து
ஓர் ஏர் உழவன் போல,
பெரு விதுப்பு உற்றன்றால்; நோகோ யானே