
தூங்குவதாய் தூற்றுகிறீர்கள்
விழிப்பின் போது கிட்டும் வேதனையை மறக்கிறேன்
ஏதும் அற்றவனுக்கு
வேறேது வடிகால்
காலம் கண்ணீர் வடிக்கிறது
கவிஞனின் ஆன்மாவில் துடிப்படங்கவில்லை
கனவுகளில் நரகம் மெல்ல வளர்கிறது
சந்தோஷங்களை காற்றில் அனுப்புகிறேன்
இதயங்களில் பெற்றுக் கொள்ளுங்கள்
ஆனந்தங்கள் பொங்கட்டும்
கழுகுகள் போடும் வைரத்திற்காக காத்திருக்கிறான்
பெரும் பாறைகள் வந்து விழுகின்றன
சிந்துபாத் போல தமிழ் எழுத்தாளர்கள் விருதுக்காக காத்திருக்கிறார்கள்
வெயில் என் கூடவே வருகிறது
விரட்டினாலும் போக மாட்டேனென்கிறது
நிழலுக்குள் ஒளிகையில் மரத்தைச் சுற்றித் தேடுகிறது
அன்பு காக்காவாய் பறக்கிறது
துளியளவு தாகம் தீரவில்லை
அதன் அணத்தல் யாரும் கேட்கவில்லை
மிரட்சியூனாடக பயணிக்கிறேன்
தனிமையின் துணை சுமையாயிருக்கிறது
காலொடிந்த முயலாய் நான்
ஒவ்வொரு நாளும்
கடந்து போகிறது
ஒன்றும் அறியாமல் இருக்கிறேன்
எல்லாம் அறிந்தவர்கள் எவராவது இருக்கின்றனரா?
மெழுகுத் தண்டிலிருந்து
உருகிய
மெழுகுத்துளிகள்
கேட்பாரற்று.
🦀
