குடை/ப.மதியழகன்

அண்ணா அந்தக்
கண்ணாடியை கழட்டி
வைச்சிட்டுப் பாருங்களேன்
வானம் வெள்ளையாகத்தான்
இருக்கு என்றாள் ராஜி
நான் ஆட்ஷேபிக்க மாட்டேன்
ராஜிக்கு குடையின்பால்
வெறுப்பேதுமில்லை எப்பக்
கிளம்பினாலும் கிழக்கையும்
மேற்கையும் பார்த்துக்கிட்டு நிற்கிறது
அவளுக்கு கொஞ்சமும் பிடிக்காது
அப்படியொன்னும் கரைஞ்சிடமாட்டேள்
என்பாள்
மொட்டைமாடிக்கு போகாதேள்
விஷப்பனி ஒத்துக்காது என்பாள்
எனக்கு நட்சத்திரங்களைப் பார்க்காமல்
தூக்கம் வராது
இந்தக் காதுல வாங்கி
அந்தக் காதுல விட்டுற
வேண்டியது தான்
வடக்க தலைவைச்சுப்
படுக்காதீங்க பித்ருக்களுக்கு
ஆகாது என்பாள்
எனக்கு தூக்கம் வந்துவிட்டால்
திசைதெரியாது
வரது வந்திருந்தான்
அவ தம்பின்னு வேற சொல்லணுமா
ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்கள்
சிலமணிநேரம் ஆகியது
கிளம்பறேன் என்றான்
சரிடா என்று நான் குடையை
எடுத்துக் கொண்டு வெளியில்
வந்ததுதான் தாமதம்
ராஜி இருங்கோ என்ன அவசரம்
கிழக்கு கருக்குது என்று
குடையை வாங்கி வரது
கையில் கொடுத்தாள்
அவன் என் மூஞ்சியையே
பார்த்துக் கொண்டிருந்தான்
எனக்கோ குடையை இழக்க
மனசு ஒப்பலை
ராஜி நான் போய்விட்டுட்டு
வர்றேன் என்று கிளம்பினேன்
பேசியது நானாவென்று
ராஜிக்கு ஒரே ஆச்சரியம்
என் உயிரை
குடையில் வைத்திருக்கிறேன்
என்று ராஜி அறிய மாட்டாள்
என்னைக் கரம்பிடித்து
அடுக்களை கரியோடு
வாழப் பழகிவிட்டாள்!