தி. சு. சதாசிவம்/தி. ச. சந்திர சேகர்

பத்து ஆண்டுகள் கடத்திய பின்னரும் இன்றைய நினைவு நாளை கடத்துவது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. குறைந்தது நாற்பது ஆண்டு நினைவுகளை அசை போட்டபடியே கடத்த முயல்கிறேன். முந்தைய வேலூர் மாவட்ட திருப்பத்தூரில் பிறந்தார், வளர்ந்தது படித்ததெல்லாம் பாட்டி வீடான ஆம்பூரில், பணி குடும்பம் என்பது பெங்களூரில் முப்பது ஆண்டுகளும் சென்னையில் இருபத்தைந்து ஆண்டுகளுமாக கழிந்தது. வெறுமனே ஒரு வாழ்வை கழித்தார் என்பதை விட, ஒரு பன்முக ஆளுமையாக விளங்கினார் என்பது அவருடன் இருந்தவர்கள் அறிவார்கள், ஆனால்
அவருடைய நேர்படப் பேசும் வழக்கமும் கோபமும் பலரிடமிருந்து விலக்கி வைத்திருந்தது. பள்ளி நாட்களில் தமிழ் இலக்கியத்தின் மீதும் நாடகங்களின் மீதும் ஆர்வம் கொண்டிருந்தார். பெங்களூரின் பணியில் அவர் தொழிற்சங்கவாதி, மிசா கைதி, மேடை நாடகங்களிலிருந்து வீதி நாடகங்களுக்கு மாற்றம் கொண்டவர். கன்னட நாவல்களின் மீது ஆர்வம் ஏற்பட்டு தானே அம்மொழியை கற்றுக் கொண்டார். உடன் இந்தி, மராட்டி, வங்காளம் மற்றும் ரஷ்ய மொழிகளை தானே கற்றார். படித்த ஆர்வத்திலேயே மொழிபெயர்த்த முதல் நாவல் சம்ஸ்காரா.

ஆஸ்துமா தொல்லை காரணமாகவே சென்னைக்கு மாற்றல் பெற்று வந்தவர் ஓய்வு காலம் வரை பணிபுரிந்தார். சென்னைக்கு வந்த பிறகே அவர் மீண்டும் தன் மொழிபெயர்ப்பு பணிகளைத் தொடர்ந்தார். இங்கு வந்து மலையாளம் கற்றுக்கொண்டு அம்மொழியிலிருந்தும் மொழிமாற்றம் செய்ய ஆரம்பித்தார்.
இங்கும் அவர் வீதி நாடக ஆர்வலர்களுடனும் மாற்றுச் சினிமா விரும்பும் ஆட்களுடனும் இணைந்து பல பணிகளைத் தொடர்ந்தார். சில தொலைக்காட்சி நாடகங்களிலும் திரைப்படங்களிலும் கூட நடித்துவந்தார். உடல் நல சிக்கல்களினால் வீட்டில் முடங்கியபோதும் மொழிபெயர்ப்பு இலக்கியங்களில் தான் ஆர்வம் கொண்டிருந்தார்.1997 இல் சாரா அபுபக்கர் அவர்களின்
சந்திரகிரி ஆற்றங்கரையில் என்ற கன்னட நாவலை மொழிபெயர்த்தமைக்காக மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. பின்னர் இது நடிகர் இயக்குநர் Ponvannan அவர்களின் இயக்கத்தில் திரைப்படமாகவும் வந்தது. சாகித்ய அகாதமி விருது மட்டுமின்றி திருப்பூர் தமிழ்ச் சங்க விருது (1998),
நல்லி திசை எட்டும் விருது (2006), நெய்வேலி புத்தக விழா அமைப்பு அளித்த வாழ்நாள் சாதனை விருது (2007) முதலான விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

மொழிபெயர்த்த சில முக்கிய நூல்கள்:

•சம்ஸ்காரா (யு.ஆர்.அனந்தமூர்த்தி – கன்னடம்)
•அந்தரத்தில் நின்ற நீர் (எஸ். திவாகர் – கன்னடம்)
•திருசம்பிகை (சந்திரசேகர கம்பார் – கன்னடம்)
•சோமனின் உடுக்கை (சிவராம கரந்த – கன்னடம்)
•கார்வாலோவின் தேடல் (பூர்ணச்சந்திர தேஜஸ்வி – கன்னடம்)
•தழும்பு: தலித் சிறு கதைகள் (மொஹள்ளி கணேஷ் – கன்னடம்)
•சந்திரகிர ஆற்றங்கரையில் (சாரா அபுபக்கர்- கன்னடம்)
•பாரதிபுரம் (யு. ஆர் அனந்தமூர்த்தி – கன்னடம்)
•ஒரு கிராமத்தின் சித்திரம் (சித்தகங்கய்ய கம்பாளு –கன்னடம்)
•கடவுளின் குறும்புகள் (எம். முகுந்தன் – மலையாளம்)
•தேடித் தேடி (ஸாரா ஜோசப் – மலையாளம்)
•காலச்சிற்பியின் கைகளில் (வல்ஸலன் வாதுஸ்ஸேரி-மலையாளம்)
•பரட்சிக்காரன் பகத்சிங் (ஜி. ராமகிருஷ்ணன்)
•தாய் ’நாடகம்’ (பெர்தோல் பிரெக்ச்ட்- ஆங்கில வழி)
•கெலிலியோ கெலிலீ (பெர்தோல்ட் பிரெக்ச்ட்)
•ரஷோமான் (அகிரா குரோசாவா)
•தண்ணீர் சந்தைக்கல்ல மக்களுக்கே (பகுதி)
•தலித் இலக்கியத்தின் போக்கும், வளர்ச்சியும் (அர்ஜூன் டாங்ளே)
நாளும் என் கனவுகளில் வரத் தவறியதில்லை என்ற போதும் இன்றைய நாளின்
ஒரு சோர்வு அவரின் மொழிபெயர்ப்புகளின் கனவு பற்றிய பதிவால் மீள்
அடைவேன் என்பதாலேயே இந்நாளில் இப்பட்டியலை என் மன
ஆறுதலுக்காகவும் மற்றவர்கள் அறியவும் பதிவிடுகிறேன்.