
குடை என்று சொல்லிவிட்டாலே
அப்பாவின் கருப்புக்குடை
நினைவுகளால் பின்னிக்கொண்டு
முந்திவந்து ஆயிரம்
கதை விரிக்கிறதே..
சாரல் பெய்யும்
வேளையில்
அம்மா செய்து தந்த
பலகாரத்தின் நெடி
இன்றும் மனநாவால்
குடை விரிக்கிறதே…
நனைந்துகொண்டு
வருவதைப் பார்த்துப்
பதறி ஓடி வந்து
அக்காவின் தாவணி
குடைபிடித்த
குடை
இன்றும் மழைநாளில்
விரிந்து நிற்கிறதே…
ஒருமழைநாளில்
குடையில்லாமல்
அவன் நடந்துசெல்கையில்
விழிக்குடைப்பிடித்தக் கதை
இன்றும்
விரிந்து நிற்கிறதே…
அன்றொரு
மதியநாளில்
செருப்பு அறுந்த சமயத்தில்
கருப்புக்குடை பிடித்து
அமர்ந்திருந்த செருப்பு தைக்கும்
தாத்தா காசில்லாமல் தைத்துத்
தந்த நினைவின் தூறல்
நன்றிக்கடனாய் விரிந்து
நிற்கிறதே
குடை மூலையில்
முடங்கினாலும்
நோக்கிய வேளையெல்லாம்
தூறலைச்
சொட்டிக் கொண்டிருக்கிறது.
