
எனது அறிவு (ஞானம்) தேவாவின் காணாப்பாடல்கள், நாட்டுப்புறப்பாடல்கள் அதிகபட்சம் செவ்வியல் பாடல் என்றால் பாரதியார் பாடல்கள், அது சி.எஸ். ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், ராஜ்குமார் பாரதி, பாம்பே ஜெயஸ்ரீ வரை கேட்பது. அப்புறம் நாகூர் ஹனிபா, சி.எஸ். ஜெயராமன் பாடல்கள் அவ்வளவுதான். கொஞ்சநாட்கள் உருது நண்பர் ஒருவரின் தொடர் உரையாடலில் லதா மங்கேஸ்கர் கேட்கத் துவங்கினேன். மிக அருமையான குரல்வளம், ஹிந்திப் பாடல்களின் மெலோடி இசை எல்லாம் ஒரு புதிய உணர்வைத் தந்தது. பொதுவாக இந்துஸ்தானி பின்னணி நமக்கு கேட்டுப் பழகிய கர்நாடகத்திற்கு ஒரு மாற்று இசையாக இருப்பது காரணம்.
இந்திப் பாடல்கள் கேட்பதில் ஒரு வசதி மொழி தெரியாததால் அதன் இசை மட்டுமே மனதோடு இழையும். தமிழ்பாடல்கள் என்றால் இசையைவிட அதன் பொருள், அர்த்தம்தான் அதிகம் மனதில் படியும். அதனால் இந்திப்பாடல்கள் வேத மந்திரம், குரான் போன்று ஒலித்தொடர்பில் மட்டுமே கேட்க முடிந்தது ஒரு வசதி. லெக்கானின் மொழியில் சொன்னால் குறிப்பான்களின் ஒலிநயம் மட்டுமே. காரணம் அதுவே, நமது நனவிலியோடு உடலை ஒலிவயப்படுத்துகிறது. அதனால்தான் சடங்குகள் மந்திரங்களாக உள்ளன. தொல்காப்பியர் மந்திரம் என்பது மறைமொழி என்கிறார் ஆச்சர்யப்படத்தக்க அளவில். அல்லது டெல்யுஸ் கூறும் ஒலிப்பிம்பம் (சவுண்ட் இமேஜ்). அந்தவகையில் இந்திப்பாடல்களில் லதாவின் குரலும், அது ஒலித்த காலமும், இசையும் ஒரு முக்கியமான மன உணர்வை உருவாக்க கூடியவை.

மற்றபடி அவர் என்ன பாடினார்? எதற்கு பாடினார்? என்பதெல்லாம் தெரியாது. ஆனாலும் இறுதிக் காலத்தில் வழக்கம்போல இந்துத்துவா அவரைக் கொள்முதல் செய்து கொண்டது. அவருக்கு இந்துத்துவ நம்பிக்கை இருந்திருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். நிச்சயமாக இந்தி தேசியப் பெருமிதங்கள் இருந்திருக்கலாம். பொதுவாக இசைஞர்களின் அரசியல் முற்போக்காக இருப்பது அத்திப் பூத்தார்போல ஒன்றிரண்டு இருக்கலாம். வாழ்க்கை, பிழைப்பு உயிர்த்தல் இவற்றின் அச்சம்கூட அவரை இந்துத்துவ பக்கம் சாய வைத்திருக்கலாம். இசைஞர்கள் இசைப்பதில் உள்ள வல்லமை அவர்களது அரசியலில், வாழ்க்கைமுறையில் இருப்பதில்லை. சிறந்த உதாரணம் இளையராஜா. லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலிகள். அவரது இசைக்குரல் வடிவமைத்த இந்தி உலகின் குரலரசியல் குறித்து இசையின் சமூகவியல், அரசியல், உளவியல் அறிந்த யாராவது எழுதலாம். அதுவே அவரை மதிப்பிடுவதற்கான சரியான கருத்தாக அமையும்.
07-02-2022
