
காயப்பட்ட
கால் வலி தாங்கி
மூன்று கால்களில்
தத்தி தத்தி நடந்து
உணவு தேடும்
சபபாணி நாய்
மொட்டை மாடி தளத்தில்
இறைந்து கிடக்கும்.
மெல்லிய குச்சி
கவ்வ
தன் கூடு எழுப்பு
மூன்றாம் முறை வட்டமிடும்
சாம்பல் நிற
சினைப் புறா
துருப்பிடித்த சைக்கிள்
மிதித்துவீடு வீடாக
செய்தித் தாள்
சேர்ப்பிக்கும்
நியூஸ் பேப்பர்
அண்ணாச்சி
எண்பது வயதில்
சாலையில் கால் நீட்டி
அமர்ந்து இட்லி தோசை
விற்று உயிர் வளர்க்கும்
லெட்சுமி ஆச்சி
பெருத்த மேனி நடத்தி
அலுப்பு அயர்வு
புறம் தள்ளி
கோயில் பூசை பணி காலம் தவறாது புரியும்
சித்த சுத்த
பலவேசப் பூசாரி
வீட்டுச்சுவர்
அந்தரத்தில் தொங்கி
சூழல் கணிக்கும்
சுறுசுறுப்பு சிற்றணில்
ஆவின் பால் சிந்திய
சாலையில் காலைப்பசி
ஆற்றி அடுத்தப் பொழுது.
சுட்ட மீனுக்கு
கண் வலை விரிக்கும்
காரிய சித்த
கருப்புப் பூனை
வெயில் சுடு ஏறுமுன்
இந்த எட்டு மூட்டை
அரிசியோடு
எஜமானையும்
நலமாய் இறக்க
வாய் நுரை தள்ள
மேம்பாலம் ஏறும்
பாரவண்டி முதிய மாடு
சின்னஞ் சிறிய
டிபன் பாக்ஸில்
தெருக் கடை
அண்டா பிரிஞ்சி
பொட்டலம் வாங்கி
அம்மா தரும் பாசம்
உணர்ந்து
புத்தக பேக் பாரம்
உணரா பள்ளி மாணவி
பவித்ரா..
நிச்சயம் எவரேனும்
வருவர் என
சுட்ட.அவித்த பனங்கிழங்கு
தெருக்கடை பரப்பி
இடுப்பில் சிசுவுடன்
காத்திருக்கும்
அத்திப்பட்டு அகிலா
என்னைச் சுற்றி
எத்தனை எத்தனை
உழைக்கும் மாந்தர்
உந்தித்தள்ளும்
நியூட்டனின் மூன்றாம் விதி பாட்டாளி காலை
பட்டறிவுக் காலை
மூன்றாம் கால்
சுய நம்பிக்கை காலை.
04/02/2022
காலை மணி : 10:37

மிகவும் ரசிக்க முடிந்த கவிதை. விடியலின் விளையாட்டுக்கள் இன்னும் நிறைய உண்டே! எழுதுங்கள்!