கம்பன் கவியமுதம்—33/வளவ. துரையன்


எருமைப் பாலால் வளரும் செந்நெல்

ஈர நீர் படிந்து இந்நிலத்தே சில
கார்கள் என்ன வரும் கருமேதிகள்
ஊரில் நின்ற கன்று உள்ளிட மென்முலை
தாரைகொள்ள தழைப்பன சாலியே [57]

                 [கார்=கரிய மேகம்; மேதி=எருமை; உள்ளி=நினைத்து]

குளிர்ச்சியான நீரில் மூழ்கிக் கிடந்த எருமைகள் இப்போது வயல்களில் வருகின்றன. கரிய மேகங்கள் போல அவை காட்சியளிக்கின்றன. அவை ஊரில் இருக்கின்ற தம் கன்றுகளை நினைக்கின்றன. உடனேயே கன்றின் மீது கொண்ட அன்பினால் அவற்றிற்குப் பால் சுரக்கிறது. இதே போலப் பால் சுரப்பதைக் கம்பனின் 45- ஆவது பாடலிலும் பார்க்க முடிகிறது. அப்பால் வெள்ளமாகப் பாய்ந்து வருகிறது. அவ்வெள்ளம் பாய்வதால் சாலி என்னும் செந்நெல் வளர்கிறது.
ஆண்டாளின் திருப்பாவையில் கன்றுக்கிரங்கின உடனேயே எருமைக்குப் பால் சுரப்பதைக் “கனைத்திளம் கற்றெருமை கன்றுக்கிரங்கி நினைத்தில்லம் சேறாக்கும்” என்பார். சாலி எனும் ஒருவகை நெல்லை திருமங்கையாழ்வார், “செஞ்சாலி விளை வயலுள்” என்று குறிப்பிடுவார்.