டைரிக் குறிப்பு 2022:/ஜெ.பாஸ்கரன்

கொரோனா என்னைத் தழுவிக்கொண்ட போது…….

மருத்துவ மனையில் ஒரு நோயாளியாக நான் தங்கியதில்லை. கொரோனா வைரஸ் அந்த அனுபவத்தைத் தந்தது!
கொஞ்சம் கண்ணெரிச்சல், ஜலதோஷம், 99 டிகிரி ஜுரம், பசியின்மை, உடல்வலி – வைரஸ் ஜுரத்திற்கான அனைத்து அறிகுறிகளும் இருந்தன. மூக்கடைப்பு – எந்த ஜலதோஷத்திலும் வரக்கூடியதுதான் – தும்மல், அவ்வப்போது இறுமல். தக்காளி ரஸம், காப்பி வாசனை சுமாராகத் தெரிந்தது. வாயில் சுவை தெரியவில்லை (மூக்குக்கும், நாக்குக்கும் ஏதோ பூர்வ ஜென்மத் தொடர்பு இருக்கவேண்டும் – மூக்கு அடைத்தால் வாசனையுடன் டேஸ்டும் தெரியாது என்பது இன்றுவரை ஏனென்று புரியாத புதிர்!). வெளியே மாறி மாறி வரும் வெப்பநிலை, மழை, ஐஸ் வாட்டர் குடித்தது, மாஸ்க் அணிந்துகொள்வது என மனம் காரணங்களைத் தேடியது! எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும், (மாஸ்க், முகத்திற்கு ஷீல்டு, கையுறைகள் என மாறுவேஷத்தில் பேஷண்டுகளைப் பார்த்தாலும்!), நம் மூக்கை வந்தடையும் கொரோனாவைத் தடுக்க வழியில்லையென்றே தோன்றுகிறது.

முதன்முறையாக வாழ்க்கையில் பாஸிடிவாக வந்த ஒரு விஷயத்திற்குக் கவலைப் பட்டேன்!

அடுத்தது என்ன?

ஒரு கொரோனா நர்சிங் ஹோமுக்குப் போன் செய்தேன் – ”அறுபதாயிரம் ரூபாய்க்கு ஒரு ஊசி (மோனோக்ளோனல் ஆன்டிபாடி என்றார்) போட்டுவிடலாம். ஐந்து நாட்கள் இருந்துவிட்டு – ஆப்சர்வேஷன் – வீட்டுக்குப் போகலாம், பயமொன்றுமில்லை டாக்டர்” என்ற பதிலில் எனக்கு ஆர்வமில்லை. மற்றொரு ஆஸ்பத்திரியில், “மூன்று நாட்கள் ஆப்சர்வேஷனில் இருங்க. சிடி செஸ்ட் எடுத்துப் பார்த்து முடிவு செய்துகொள்ளலாம்” என்றார்கள். எல்லாமே அவரவர் பார்வையில் சரியாகத்தான் இருந்தது. மேலும் சில போன் ஆலோசனைகள். இதற்குள் கலாவுக்கும் பாஸிடிவ் ரிபோர்ட் வரவே, உதவிக்கு யாரையும் தொந்திரவு செய்யவேண்டாம் என்று முடிவு செய்தோம்!

கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிட்யூட் – கொரோனா மருத்துவமனைக்குச் சென்றோம். கையில் இரண்டு நாளைக்கான உடைகள் மட்டும் எடுத்துக்கொண்டு மனதில் ஒரு கவலையுடன் வாடகை வண்டியில் சென்றோம். புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஒரு முழுமையான அரசு மருத்துவமனை, எந்த கார்ப்பொரேட் மருத்துவ மனைக்கும் குறைந்ததல்ல என்று சொல்லக்கூடிய அளவில் ‘பளிச்’ சென்று இருந்தது!

இரத்த அழுத்தம், ஈசிஜி, ஆக்ஸிஜன் அளவு எல்லாம் பார்த்து, “நீங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம். ஆனாலும், 60 வயதுக்கு மேல் ஆனதாலும், இரத்த அழுத்த மாத்திரை எடுத்துக்கொள்வதாலும், இங்கே ஐந்து நாட்களுக்குத் தங்கிச் செல்வது நல்லது” என்றார் முழுபாதுகாப்பு உடையில் இருந்த டாக்டர். நாலு முழம் வேட்டியில், டீ சர்டுடன் இருந்த நான் ஒரு டாக்டர் என்று சொன்ன போது, நம்பமுடியாமல் பார்த்தார்.

அரைமணி நேரத்தில், ஒரு சிப்பந்தி வந்து, எங்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு, சிரித்த முகத்துடன், லிஃப்டில் ஏறி, முதல் மாடியில் சிடி ஸ்கான் எடுத்து, வார்டில் கொண்டு விடும்வரையில், அவ்வளவு கரிசனத்துடன் நடந்து கொண்டார். முதலில் பொது வார்டிலும், பின்னர் 4 பேர் தங்கும் வார்டிலும் எங்களைத் தங்க வைத்தனர். ஒரு தலையணை, வெளிர்நீல பாலிப்ரொபிலீன் பெட்ஷீட் இவையே கொடுக்கப்பட்டன. காலையில் ஒரு முறை ரத்த அழுத்தம் சரி பார்ப்பது (அதுவும் BP இருப்பவர்களுக்கு மட்டும்), ஊசி போடுவது, ட்ரிப் போடுவது (தேவையிருப்பவர்களுக்கு மட்டும்), என நர்ஸ்கள் மின்னலாய் வந்து மறைவார்கள்! ஜூனியர் டாக்டர் இரண்டு நிமிடமும், சீனியர் டாக்டர் ஒரு நிமிடமும் வந்து போவார்கள். ஆனாலும் மனதில் ஒரு திருப்தியும், அமைதியும் இருந்தது.

தினமும் நேரம் தவறாமல் கொடுக்கப்பட்ட உணவு பற்றி சொல்லியே ஆகவேண்டும். காலை டிபன் – இட்லி, உப்புமா, சட்னி சாம்பார்; ஒன்பது மணிக்கு கபசுர குடிநீர், சாத்துக்குடி ஜீஸ் (சர்க்கரை இல்லாமல்); 12 மணிக்கு முழுச் சாப்பாடு, ரஸம் சாதம், சாம்பார், வற்றல் குழம்பு, ஒரு காய், ஒரு கூட்டு, மோர், ஊறுகாய், சாதம், தினமும் (ஞாயிறு ஸ்பெஷல் பிரியாணி, கலந்த சாதம், வடை!), 3 மணிக்கு சூப், பொட்டுக்கடலை, 6 மணிக்கு சர்க்கரையில்லாத பால், சுண்டல், இரவு 8 மணிக்கு டிபன், சப்பாத்தி, இட்லி, உப்புமா சட்னி, குருமா என ஏதோ ஒன்று! முன்னால் ஒரு பிரபல ஓட்டலிலிருந்து வந்ததாகவும், இப்போதெல்லாம் காண்ட்ராக்ட்டில் அங்கேயே செய்வதாயும் செவி வழிச் செய்தி கிடைத்தது. எதுவாகிலும், நேரம் தவறாமல் வயிற்றுக்கீந்ததை மறுப்பதற்கில்லை. (அடுத்த பெட் வாசி, ‘ஒன்றுமில்லை, நீங்கள் போகலாம்’ என்று மருத்துவர்கள் சொன்னபோதும், ஏதாவது காரணம் சொல்லி ஐந்து நாட்கள் இருந்தார். அவருக்கு நோய் அறிகுறிகள் எதுவும் இல்லை – ஊசி, டிரிப் எதுவும் கிடையாது. ஐ.டி. கம்பெனியில் வேலை என்றார் – ரூமில் உதவிக்கு யாரும் இல்லையென்றார் – கொரோனா கருணை!)

இதற்கிடையில் தினமும் காலை 10 மணி அளவில், ஸ்டீம் இன்ஹலேஷன் (ஆவி பிடித்தல்), பிராணாயாமம் பயிற்சி எல்லாம், எல்லா பேஷண்டுகளுக்கும் கொடுக்கப்பட்டது.

ஒரு நாள் சென்று இரத்தப் பரீட்சைகள் – மிகக் குறைவான, அத்தியாவசியமான டெஸ்டுகள் மட்டும் – செய்தார்கள். சிடி ரிபோர்ட், இரத்தப்பரீட்சை ரிபோர்ட் பார்த்து, தேவையிருந்தால், ஆண்டிபயாடிக் மாற்றினார்கள். எனக்கும், கலாவுக்கும், வயது, இருமல் கருதி (டாக்டருக்கான சலுகையாகவும் இருக்கலாம்!) ரெம்டெசிவீர் ஐந்து நாட்கள் கொடுத்தார்கள். ஐ.வி. டிரிப் போட்டது, ஊசி போட்டது, டிரிப் முடிந்து நர்ஸ் வர நேரமானது போன்ற சின்ன சின்ன குறைகளை பெரிதுபடுத்துவது நியாயமில்லை!

பி.காம்ப்ளக்ஸ், ஆஸ்பிரின், பாராசிடமால் போன்ற சாதாரண மருந்துகள்- உடன் அவரவர் எடுத்துக்கொள்ளும் சொந்த மருந்துகளை எடுத்துக்கொள்ளவேண்டும்.

நான் இருந்த சமயம் கிட்டத்தட்ட முன்னூறு பேஷண்ட்ஸ் இருந்ததாகக் கூறினார்கள். (500 – 600 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை).

மற்ற இடங்களில், கொரோனா வந்தவர்களைத் தனியறையில் போட்டு, சாப்பாட்டை அறைக்கு வெளியே வைத்து, எந்த உதவியும் செய்யாமல், மனத்தளவில் நோயாளிகளாக்கிய நிலை இங்கே இல்லை. ஆயாக்களின் சேவை அவ்வளவு சிறப்பு. தினமும் பெருக்குவது, மாப் போடுவது, கழிப்பறை கழுவுவது (வெஸ்டர்ன் கழிப்பறை தனியாக) என அமைதியாக வேலை நடந்தது. காலையில் வெளியிலிருந்து டீ, காப்பி வாங்கி வருவது கூட உண்டு. என் டிரைவர் வாங்கி வந்த போர்வைகள், டம்ப்ளர்கள், தலையணை, மாற்று உடைகள் எல்லாவற்றையும், வெளியிலிருந்து உள்ளே வாங்கி வருவது என அவர்கள் உதவி மறக்க முடியாதது. பேச்சிலேயே இருந்த ஸ்நேக பாவம் பாதி வியாதியைப் போக்கியது!

“ஏம்மா, இங்க வேலை செய்யறீங்க. கொரோனா பயம் இல்லையா?”
“இருக்கு சார். எங்களுக்கும் வரும். டாக்டர் சொல்றப்டி கேட்டு, ஒரு வாரம் தனிமைப்படுத்திட்டு, வந்துடுவோம்” மிக இயல்பாக அவர்கள் சொன்னது எனக்கு வியப்பாய் இருந்தது.

டாக்டர்களும், பேசும்போது, “இரண்டு வருஷமா இதைத்தான் செய்துகொண்டிருக்கிறோம் – இந்த முறை பரவாயில்லை” என்பதுபோல் சொன்னார்கள்.

டிஸ்சார்ஜ் அன்று, ஆயாவே எங்களுடன் வந்து, கவுண்டரில் டிஸ்சார்ஜ் சம்மரி, மருந்துச் சீட்டு எல்லாம் வாங்கிக் கொடுத்தார். ஒரு கையெழுத்து போட்டு, கிளம்பிவிட்டோம், அவ்வளவுதான். ஒரு பைசா கூட யாரும் கேட்கவில்லை. ‘இனாம்’ கூட யாரும் கேட்கவில்லை! அவர்களது சேவைக்கு, அரசின் கரிசனத்திற்கு மனம் நிறைந்த நன்றியையும், வாழ்த்துகளையும் சொல்லிக் கொண்டேன்.i

அன்றைய தலைவர்கள், பெரும்புள்ளிகள் எல்லோரும் அரசு மருத்துவ மனைகளில்தான் சிகிச்சை பெற்றுக்கொள்வார்கள். நான் மாணவனாக இருந்தபோது பல வி.ஐ.பி. க்கள் – நாகேஷ், சி.பி.சிற்றரசு, கண்ணதாசன் போன்றவர்கள் மற்றும் மந்திரிகள் எல்லோரும் ஜி.எச். க்குத்தான் வருவார்கள். இன்று அந்தநிலை மாறிப்போனது ஏன் என்பது இன்னும் எனக்கு விளங்காத புதிர்தான்.