கனவில் தோன்றிய கதை – 4/எல்.ரகோத்தமன்


 
நானும் என் நண்பனும்


 
கதவை சாத்திக் கொண்டு தனிமையில் அமர்ந்து  மூன்று நாட்களாக நான் ஒரு கதையை எழுதிக் கொண்டிருந்தேன். அது என் நண்பனைப் பற்றியது. அந்த கதையை எழுத ஆரம்பத்ததிலிருந்து நான் கனவுகளால் பீடிக்கப் பட்டுக் கொண்டிருந்தேன். எல்லோருக்கும் கனவு வருவது சகஜம்.. நான் ஒன்றும் அதற்கு விதி விலக்கல்ல. ஆனால் என் கனவில் சம்பந்தம் இல்லாமல் அம்சா அடிக்கடி வருகிறாள். நீல நிற டி-ஷர்ட், ஜீன்ஸ் அணிந்து, பளிச் சிரிப்படன் தீண்டிக் கொண்டே இருக்கிறாள். அம்சா என் நண்பனின் காதலி.  நண்பன் எப்போதுமே காதலுக்கு எதிராகவே பேசிக்கொண்டிருப்பவன். அவனுக்கும் ஒரு காதலி என்பதை முதலில் என்னால் ளற்றுக் கொள்ள முடியவில்லை. இருந்த்தாலும் காதல் யாரையும் விட்டு வைப்பதில்லை என்பது நிஜம். முதல் சந்திப்பு அனுபவம் மற்றும் பிற விஷயங்களை  என்னிடம் விளாவாரியாக என் நண்பன் அவ்வளவாகச் சொல்லிக் கொண்டதில்லை. அம்சாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட ஃபோட்டவைக் காட்டி “ ஐ லவ் ஹெர். டூ மச்.. ஷி  டூ… “  என்று ஒரு நாள் சொன்னபின்பு அவன் மனதில் ஏதோ மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.  வாழ்க வளமுடன் என்று வாழ்த்துதலுடன் நிறுத்திக் கொண்டேன்.  காதல் தொற்றிக்கொண்ட பின்பு என் நண்பன் அடிக்கடி காணாமல் போய்விடுவான்.  திடீரென்று ஒரு நாள் கைப் பேசியில் அழைப்பு வரும்.  உன்னைப் பார்க்க வேண்டுமே என்பான். நானும் தட்டாமல் போவேன். அப்படித்தான் மூன்று வாரங்களுக்கு முன் என்னை அழைத்து “ நாம் பீச்சில் சந்திக்கலாமா..” என்றான். என்ன விஷயம் என்று கேட்டதற்கு , “ மனசு சரியில்லை …. யாருடனாவதுப் பேச வேண்டும் போல் இருக்கிறது என்றான்.  சிறந்த அறிவாளி, கை நிறைய சம்பாதிக்கிறான், அன்பான காதலி – இவனுக்கென்ன மனத்தாங்கல் என்று நினைத்துக் கொண்டேன்.  நினைப்பு ஒரு புறம் இருந்தாலும், கேட்டுக் கொண்டதற்காக நேரில் அவனை சந்தித்தேன். அவன் முகத்தில் ஏதோ ஒரு வாட்டம் இருந்தது. அதை மறைத்துக் கொண்டு அவன் ஏதேதோ பேசினான். தனக்கு பதவி உயர்வு கிடைத்திருப்பதாகச் சொன்னான். கலிஃபோர்னியாவிலிருந்து  தாய் தந்தையர் இன்னும் பத்து நாட்களில் வரப்போவதைச் சொன்னான். முதல் நாள் இரவு கண் விழித்துப் பார்த்த ஒரு ஆங்கிலப்படத்தைப் பற்றி விவரித்தான். புதிய பைக் ஒன்றை புக் செய்யப் போகும் திட்டத்தையும் சொன்னான். பழய பைக்கை விற்க  ஒரு வழி கேட்டான். நீ வாங்கிக் கொள்வதாக இருந்தால் பணம் கூட வேண்டாம் என்றான். அவன் மட்டுமே பேசிக் கொண்டிருந்தான். நான் அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தேன். எதைப் பற்றியோப் பேச அழைத்துவிட்டு எதையோப் பேசிக்கொண்டிருக்கிறான் என்பதை உணர முடிந்தது. அவன் திடீரென்று மௌனமாகி விட்டான். மௌனத்தின் ஊடே கடலலை கூட  இப்போது துல்லியமாகக் கேட்டது. மேலும் பேச வந்த விஷயத்தைப் பற்றிப்  பேசுவதை எதுவோ அவனைத் தடுப்பதும் தெரிந்தது. எதுவென்று  என்னால் ஊகிக்க முடியவில்லை. ஒரு வழியாக தட்டுத் தடுமாறி மௌனம் கலைத்தான்.  நா தழுதழுக்க அம்சா பால்கனியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டு விட்டதாகச் சொன்னான். தூக்கிவாரிப்போட்டது! ”என்னடா சொல்ற…என்னடா ஆச்சு.. என்னிக்குடா.. “ என்னால்  கேள்விகள் மட்டுமே கேட்க முடிந்தது. நண்பனைவிட நானே மிகவும் அதிர்ச்சிக்குள்ளானேன். அவன்  சொன்ன விஷயம் இன்றுவரை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.  அம்சா என் மூளையில் தினம் தினம் குடைந்து கொண்டிருக்கிறாள்.  கனவில் வேறு வந்து தொல்லை கொடுக்கிறாள். கடைசியாக அம்சாவை நான் பார்த்தது இதே போல் ஒரு நாள் நண்பனோடு பீச்சில் . நீல நிற டி-ஷர்டும், ஜீன்சும் அணிந்து பளிச் சிரிப்புடன் – என் கண் முன்னால்  தோன்றி அடிக்கடி மறைகிறாள்.   அம்சா உனக்கு என்ன ஆயிற்று? என் இந்த முடிவக்கு வந்தாய்? வீட்டில் காதலக்குத் தடையா? உன் நண்பன் கொஞ்சம் கோபக்காரன் என்று என்னிடம் ஒரு முறைச் சொல்லியிருக்கிறாய். அப்படி ஏதேனும் கோபித்துக் கொண்டானா அவன்? உயிரை மாய்த்துக் கொள்ளுமளவிற்கு அப்படியென்ன நடந்தது?   என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், உங்கள் இருவரிடையே மத்யஸ்தம் செய்திருப்பேனே! நினைவின் கோர்வையின சிந்தனையோட்டத்தில் கதை நகர்ந்து கொண்டிருக்கும் போது கதவு தட்டும் சப்தம் கேட்டது.  யார் இந்த லேரத்தில் என்று யோசித்தபடியே போய் பதவைத்திறந்தேன்.  எதிரே இரண்டு போலீஸ்காரர்கள் நின்றிருந்தனர். வாசலில் ஒரு போலீஸ் ஜீப் நின்றிருந்தது. மிகவும் துணுக்குற்றேன்.  என்னை போலிஸ்காரர்கள் விசாரணைக்காக அழைத்துச் சென்றார்கள்.
என் கதையை, என் நண்பனை முன்னிறுத்தி நான் எழுதிக் கொண்டிருந்த கதை முடிவுக்கு வந்ததுவிட்டது. ஆம் அந்த நண்பன் நானே தான். அம்சாவின் ஆன்மா சாந்தி அடைவதாக !
 

08-02-2022 
                                                **