---

“ஏன் தாத்தா, ஊரு ஒலகத்துலயெல்லாம் வயசானா சனங்க சாவுராங்க்யளே, நாளு பூரா தண்ணியில மெதக்குறியே ஒனக்கு சாவெல்லாம் வராதா?”
“சாவு எனக்கு ஏண்டா வருது? என் கிட்ட வியாதியே வர்றதில்ல. ஏன் தெரியுமா? என் ஒடம்புல ரத்தத்த விட ஆல்கஹால்தான் அதிகம் ஓடுது. அதுனாலே எந்த கிருமியும் என் கிட்டக்க வந்தாலே அலறி அடிச்சுகிட்டு ஓடிடும். ஏண்டா நடந்து வர்றே? உன் ஓட்ட வண்டி என்னாச்சு?”
“எவனோ கெளப்பிட்டான், தாத்தா. போலீசுல கம்ப்ளைன்ட் பண்ணிருக்கேன்.”
“அடப் பாவமே! வேடிக்கையைப் பாரு. நான் தண்ணி அடிச்சுட்டு மட்டையாயிட்டேன்னா எவனாவது ஒருத்தன் இன்னொருத்தனையும் கூட்டிக்கிட்டு என்னையும், என் வண்டியையும் என் வீட்ல பத்ரமா கொண்டாந்து விட்டுட்டுப் போவான், தெரியுமா?. என் வண்டியை ஒருத்தனும் இதுவரைக்கும் கெளப்புனது இல்லை. குடிகாரனுக்கு அந்த மரியாதை உண்டு. கவலைப் படாதே. திருட்டுப் போன மொபெட்டை கண்டு பிடிச்சா ஒனக்கு வீலாவது கெடைக்கும். பையில என்னடா?”
“தக்காளி தாத்தா. திங்கிறியா? இந்தா.”
“வேண்டாம். ஙொப்பா ஒரு தடவை ஒடம்பு குளிர்ச்சிக்கி நல்லதுன்னுட்டு திங்க கடையில தக்காளி அரைக் கிலோ வாங்குனாரு. நான் அவரை ஒரண்டை இழுத்தேன். “மச்சான், ஒடம்பை ரொம்ப குளிர்ச்சி ஆக்கிடாதே. செத்தப்றம் ஒடம்பு சாமானியமா வேவாது. நெறயா வெறவும் விராட்டியும் தேவைப்படும். என் ஒடம்பெல்லாம் கற்பூரம் மாதிரி. ஒரு தீக்குச்சி போதும். சும்மா குப்புன்னு பத்திக்கும்.” எரிச்சலோட சிரிச்சாரு. சுத்தபத்தமா இருந்த அவரு போய்ச் சேந்துட்டாரு. நான் இன்னும் இருக்கேன். இதுலேர்ந்து என்னடா தெரியுது?”
“அது இருக்கட்டும். ஏன் தாத்தா, நீ எப்பயிலேர்ந்து குடிக்க ஆரம்பிச்சே? எதும் காதல் தோல்வியா”
“அது…. பத்துப் பன்னெண்டு வயசுருக்கும்.”
“அந்த வயசுலேயா? ஏன், ஙொப்பாரு ஒன்னைக் கண்டிக்கலையா?”
“கண்டிக்கிறதா? அவர் இருந்தா நான் ஏண்டா குடிக்கிறேன்? அவரு என் கண்ணு முன்னாலேயே செத்துட்டாருடா.”
“அப்பாவை சாவக் குடுத்தவன் எல்லாம் குடிக்கிறானக்கும்? ஏன் ஒடம்பு சரியில்லாமப் பொய்டுச்சா?
“ஒடம்பு ரொம்ப சரியா இருந்ததுனால தான் செத்தாரு.”
“என்ன தாத்தா சொல்றே? ஒன்னுமே புரியல. செத்தெ வெவரமாத்தான் சொல்லேன்.”
“எங்கப்பா என்னை விட நல்லாருப்பார். ஆறரை அடி ஒயரம். கழுத்து இல்லாத சந்தனக் கலர் ஜிப்பா போட்டிருப்பார். அதுல ரெண்டு தங்க நிற போடுறப்ப மட்டும் பொருத்தக் கூடிய குமிழ் பொத்தான். இடுப்புல சிங்கப்பூர் பச்சை பெல்ட். சின்ன தொப்பை. கம்பீரமா அழகா இருப்பார். கிராம கம்யூனிஸ்ட் கட்சி தலைவர். வெளியூர் போறப்ப பஸ் அவர் வீட்லருந்து வந்து ஏறுர வரைக்கும் நிறுத்தி காத்துகிட்டு இருக்கும். அப்போ சில பெரிய மனுஷங்களுக்கு இந்த மரியாதை உண்டு.”
“இப்ப பஸ் நின்னு ஆளு ஏறுரதுக்குள்ள பஸ்ஸை எடுத்தர்ராங்க்ய”
“எங்கப்பா ஊர்ல ரொம்ப புத்திசாலிடா. மூனாவது வரைக்கும்தான் படிச்சாரு. ஆனா அப்றமா நெறயா படிச்சாரு. பொருள் முதல் வாதம், சூலைகட்டு வாதம் அப்புடி என்னென்னமோ சொல்லுவாரு.”
“அப்ப நீயும் நல்லா படிச்சிருக்கலாமே. படிச்சிருந்தா அப்ப இருந்த சான்சுக்கு இன்னேரம் பெரிய வாத்தியாராவோ ஆபீசராவோ இருந்திருக்கலாமே? ஒனக்கு படிப்பு வல்லையா? நீ மட்டும் ஏன் படிக்காமப் போனே?”
“நான் நல்லாதான்டா படிச்சேன். க்ளாஸ்ல மொத ரெண்டு மூனு ரேங்குக்குள்ளே வாங்குவேன். கண்ட சின்னச் சின்ன புக்கெல்லாம் நெறயாப் படிப்பேன். ஒரே ஒரு சவால் என் படிப்பு, வாழ்க்கை எல்லாத்தையும் சீரழிச்சுடுச்சு.”
“பன்னெண்டு வயசுல ஒனக்கு என்ன சவால் தாத்தா?”
“சவால் எனக்கு இல்லடா, எங்க அப்பாவுக்கு. எங்கப்பா ஒரு சமாதானப் பிரியர். ஆனா அவருக்கு சண்டை நுணுக்கம்லாம் தெரியும். ஒரு தடவை அவருக்குத் தெரிஞ்ச ஒருத்தர் ரெண்டு மான் கொம்பு மடுவை அப்பாகிட்ட மறு வாரம் வாங்கிக்கிறதா சொல்லி கொடுத்துட்டுப் போனார். ஒரு நாள் அதைப்பத்தி அப்பாவும் என் மாமா ஒருத்தரும் பேசிக்கிட்டுருந்தாங்க.
“ஒருத்தர் சுளுக்கியால எப்புடிக் குத்துனாலும் ரெண்டு மான் கொம்பு மடுவால அதை நம்ம மேல படாம தடுத்துற முடியும், தெரியுமா?” அப்புடீன்னு அப்பா சொன்னார்.
“சுளுக்கின்னா என்னன்னு இப்பப் பசங்க பல பேருக்குத் தெரிஞ்சுருக்காது. சுளுக்கிங்கிறது இரும்பால செஞ்ச ஒரு கூரான ஆயுதம். நீளமான மரத் தண்டோட மொனையில சொருவியிருக்கும். இல்லன்னா இரும்புத் தண்டோட மொனையில. அதை ஒருத்தன் வவுத்துல சொருவி வெளியே இழுத்தா உள்ளேருந்து அவன் கொடலை உருவி வெளியே கொண்டு வர்றதுக்கு வசதியா மொனையில ஒரு சின்ன கொக்கி மாதிரி இருக்கும். தூண்டில் முள்ளோட விஸ்வரூபம்னு வச்சுக்கவேன். நீ சுளுக்கி பாத்திருக்கேல்ல?”
“பாத்துருக்கேன்,தாத்தா. மிந்தி எங்க வீட்ல ரெண்டு சுளுக்கி இருந்துச்சு. மரம், இரும்பு ரெண்ட்லயும்.”
“மான் கொம்பு மடு பாத்துருக்கியா?”
“இல்ல, தாத்தா. சினுமாவுல பாத்ததுதான். உழைக்கும் கரங்கள்ல எம்ஜியாரு மான்கொம்பு சண்டை சூப்பரா போடுவாரு.”
“அதேதான். மான் கொம்பு, சுருள் கத்தி சண்டையெல்லாம் எம்ஜியாருக்கு நம்ம மன்னார்குடிக்கார்ரு ஒருத்தர்தான் கத்துக் குடுத்தார்னு சொல்லுவாங்க. பேரு ஞாபகம் இல்லை. சினுமாவுல பாதுகாப்பா இருப்பாங்க. பிரச்னை இருக்காது. வில்லன் நடிகருங்களும் கூட்டாளிங்கதானே. உயிருக்கு ஆவத்து இருக்காது. மான் கொம்பு மடு ஒரு அழகான, கம்பீரமான நடுவுல கைப்புடி இருக்குற ஆயுதம். எண்ணை தடவி சும்மா பளபளன்னு கண்ணைப் பறிக்கும். கையால புடுச்சா உள்ளே விறுவிறுன்னு ரத்தம் ஏறிக் கொப்புளிக்கும்.
“ ‘சும்மா கதை விடப்டாது. சுளுக்கியால குத்துறத மடுவை வச்சு தடுக்கலாம்குறது இருக்கட்டும். அது ஒங்களால முடியுமா?’ அப்புடீன்னு மாமா கேட்டாரு. ‘என்னால முடியும். நீங்க சுளுக்கியால என்னை எப்புடி வேணுன்னாலும் குத்திப் பாக்கலாம். நான் மடுவால அதை எம்மேல படாம தடுத்துக்க முடியும்’ ன்னு அப்பா சொன்னார். கொஞ்ச நேரத்ல சீரியசாவே ரெண்டு பேரும் சவால் விட்டுக்க ஆரம்பிச்சுட்டாங்க.
“ ‘மாப்ள எங்கிட்ட இதுக்கு சரின்னு சொல்லனும். இது வெளையாட்டுதான். ஆனா ரொம்ப ஆவத்தான வெளையாட்டு. எள்ளு மொனையளவு தவறுனுச்சுன்னாக் கூட உயிருக்கே ஆவத்தாப் போவ சான்ஸ் இருக்கு’ மாமா என்னோட சம்மதத்தைக் கேட்டார்.
“எனக்கு எங்க அப்பாவோட தெறமையில முழு நம்பிக்கை இருந்துச்சு. அப்பா அப்புடி ஒன்னும் வெறும் சவடால் பேச்சுக்காரர் இல்லன்னு எனக்கு நல்லாத் தெரியும். அவரால எந்த தாக்குதலயும் மடுவை வச்சு ஈசியா தடுத்துக்க முடியும்னு நான் நம்புனேன். சாவப் பயந்தவன் எதையுமே சாதிக்க முடியாது. ஆவத்து எதுலதான் இல்லை? ரோட்ல ஓரமா ராத்ரியில சைக்கிள்ல போனப்ப ஒரு லாரிக்காரன் என் தாத்தாவை தட்டிட்டுப் பொயிட்டான். எங்க பரம்பரையில யாரும் சவாலுக்குப் பின் வாங்குனதில்ல. எவனாவது கொஞ்சம் உசுப்பி விட்டான்னா போதும். எங்களை யாரும் புடிக்க முடியாது.
“சரி,தாத்தா, ஒன்னைக் கேட்டாரு. பாட்டியைக் கேட்டாரா? அது என்ன சொன்னுச்சு?”
“எங்க அம்மாவுக்கு இது எதுவும் தெரியாது. அம்மாவைப் பத்தி யாரும் நெனைக்கவேயில்லை. எவனாவது, எங்கயாவது, எப்பவாவது பொம்புள அபிப்ராயத்தை கேட்ருக்கானா? கேட்ருந்தா இப்படிக் கேவலப்படுவானா? அப்புடி கேட்ருந்தா மகாபாரதமே பொறந்துருக்காதே!”
“கேக்கலைன்னா ராமாயணமும் பொறந்துருக்காது.”
“என்னடா முணுமுணுக்குறே?”
“ஒன்னுமில்ல,தாத்தா. நீ கதைய சொல்லு.”
“பல பேருக்கு முன்னால நான் சம்மதம் கொடுத்தேன். எதுக்கு சம்மதம்னு எனக்கு அப்ப தெரியல. எங்க வாழ்க்கை முச்சூடும் சீரழிஞ்சு சின்னா பின்னம் ஆவுறதுக்குன்னு அப்பறந்தான் ஒறச்சுது. என் விதியை நானே என் கையாலேயே எழுதிக்கிட்டேன்.”
“என்ன தாத்தா ஆனுச்சு?”
“ம்…. மாமா பல கோணத்துல சுளுக்கியால மாத்தி மாத்தி குத்திகிட்டேருந்தார். எங்கப்பா மன்னன்டா. ரெண்டு மடுவாலயும். சும்மா சொழண்டு சொழண்டு தடுத்தார். கண் கொள்ளாக் காட்சி. நல்ல கூட்டம் கூடிடுச்சு. ஒரே உற்சாகக் கூச்சல். அப்பாவ எல்லாரும் கரகோஷம் பண்ணி சீட்டி அடுச்சு பாராட்டி கூச்சல் போட்டுகிட்டே இருந்தாங்க. மாமா ரொம்ப வேகம் குடுக்காமயேதான் குத்துனார்னு எனக்கு தோணுச்சு. எல்லாம் சூப்பரா இருந்துச்சு.
“ஒரு தடவை ஒரு பெரிய தலைவரை கொலை செய்றதுக்கு தீவிரவாதிகள் செஞ்ச பல முயற்சிங்க தோத்துக்கிட்டே இருந்துச்சு. அப்போ ஒரு தீவிரவாதி சொன்னார்: “ஒங்க தலைவர காப்பாத்த நீங்க ஒவ்வொரு தடவையும் ஜெயிச்சாகணும். ஆனால் நாங்க அவர கொல்ல ஒரே ஒரு தடவை ஜெயிச்சா போதும்.”
“அப்றம் என்ன தாத்தா, ஆனுச்சு?”
“ கடவுளுக்கே பொறுக்கலை. எப்புடி நடந்துச்சுன்னே தெரியலை. சுளுக்கி மாருல பாஞ்சிடுச்சு. ஆஸ்பத்திரிக்கி போறதுக்குள்ள கதை முடிஞ்சுது.
“மூனு நாள் பேதலிச்ச மாதிரி இருந்தேன். நான் இருந்த நெலமையைப் பாத்துட்டு யாரோ எனக்கு பிராந்தியை ஊத்தி விட்டுட்டான். அன்னையிலேருந்துதான் இப்புடி ஆனேன். என் அப்பாவை நாந்தான் கொன்னுட்டேன். நான் மட்டும் அப்ப சம்மதம் சொல்லாம இருந்திருந்தா எங்கப்பா செத்துருக்க மாட்டார். அந்த மனசு உறுத்தல என்னால மறக்கவே முடியல. அதோட எல்லாம் போச்சு. படிப்பு, சந்தோஷம், இருந்த கொஞ்ச நஞ்ச சொத்து, எல்லாமே போச்சு.. நடைப் பொணமானேன். அந்த மாமா தங்கச்சி தாலியை தானே பறிச்சுட்டதா மருகிப் போனார். அந்த குறுகுறுப்போட அவரும் ரொம்ப நாள் வாழல. வெளையாட்டு எதோ ஒரு எல்லையை மீறுனதால பலபேரு வாழ்க்கை வீணாப் போச்சு.”
@@@@@@@
