
தூக்கமின்மையின் கருணை காட்டல்
அவனுக்கு நேற்றைய ஆழ் துயில்.
அடர்மழை பெய்கிற கனவு.
முகு முகுக்கும் புறாக்களின்
சங்கிலிக் குரல்
கனவின் காது மடலில்.
சம்மணமிட்டு வயிறு எக்கித்
தாளம் கொட்டுகிற காரைக்கால் அம்மையின்
ஒற்றை முலையில் முற்றிய புற்று.
பதறி எழுந்த மிகு காலை விழிப்பில்
செந்தளிர் நாக்குத் தொங்கவிடுகிறாள்
பின் வீட்டு மாமரக் காளி.
