
வாழ்க்கையின் புதிர்களை புதிர்களாகவே வைத்திருப்பதன் மூலமாக இலக்கியம் சிந்திக்கத் தூண்டுகிறது, கலையாகிறது என்ற இலக்கியக்கொள்கையினை உடையவர் நபகோவ். அவருடைய “லோலிதா” மிகப் பெரும் வெற்றியடைந்த நாவலாக மாறியபோது அதை அமெரிக்க விமர்சகர்கள் பலரும் ஃபிராய்டிய உளப்பகுப்பாய்வு விமர்சனத்திற்கு உட்படுத்தி விளக்கம் அளித்தபோது பதின்பருவ சிறுமியோடு ஒரு நடுத்தரவயதினனுக்கு ஏற்படும் காம ஈர்ப்பு ஆழமான நகைச்சுவையோடும் அதன் புதிர்த்தன்மை குறைவுபடாமலும் அணுகப்படவேண்டும், விளக்கங்கள் அளித்து அதன் புதிர்த்தன்மையினை அழித்துவிடலாகாது என்று நபகோவ் கூறினார். உளப்பகுப்பாய்வு முடிவுகள் தொடர்ந்தபோது அவர் ஃபிராய்டினை Sick Mind Fraud என்று அழைக்கவும் தயங்கவில்லை. “லோலிதா”வை விட மிக அதிகமான புதிர்த்தன்மை வாய்ந்த நாவலாக “ Despair” நாவலையே கருத வேண்டும். நவீன இலக்கியத்தில் இரட்டைகள் கலா உத்தியாக மாறி தன்னிலையைப் பற்றி அதிகமும் சொல்லக்கூடியதாக, நாவலில் கதை சொல்லுதலைப் பற்றி அதிகமும் சொல்லக்கூடியதாக உணரப்பட்டபோது அதன் நுட்பங்களை புதிர்த்தன்மையோடு விவரித்த நாவல் “Despair”. போர்ஹெஸின் “Borges and I” சிறுகதையின் நீட்சி போலவும் Despair நாவலை வாசிக்கலாம்; ஆனால் நபகோவின் புதிர் என்னவென்றால் கதையின் நாயகனான ஹெர்மானும் அவன் இரட்டையான ஃபெலிக்சும் தோற்றத்திலோ, குணத்திலோ, வாழ்நிலை சூழல்களிலோ ஒருவரைப் போல ஒருவர் இருப்பதில்லை. தன்னைத் தானே கொலை செய்துகொள்ள விரும்பும் ஹெர்மான் ஒரு சாக்லேட் தொழிற்சாலை முதலாளி. அவன் தன் மனைவி தன்னை உயிருக்கு உயிராக நேசிப்பதாக நம்புகிறான் ஆனால் அவளுக்கு ஒரு கள்ள உறவு இருப்பதும் அவனுக்குத் தெரியும். ஹெர்மான், பிச்சைக்காரன் போல தெருவில் சுற்றிக்கொண்டிருக்கும் ஃபெலிக்சை ஏன் தன்னுடைய இரட்டையாக உணர்கிறான் என்று ஏதும் விளக்கமில்லை. ஆனால் அவனிடம் தன்னுடைய அடையாள அட்டை அனைத்தையும் கொடுத்து அவனை ஹெர்மானாக மாற்றி அவனை சுட்டுக் கொன்று விடுகிறான். போலீஸ் கொலைகாரன் ஹெர்மானை சுலபமாகக் கண்டுபிடித்துவிடுகிறார்கள். அவர்கள் அவனை கைது செய்தபின் கதைசொல்லல் தன்னிலைக்கு மாறிவிடுகிறது. ஹெர்மானின் டைரிக்குறிப்புகளை நாம் வாசிக்கிறோம் அதில் அதன் கடைசி பதிவு ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருக்கிறது. நபகோவின் இன்னொரு நாவலான “Invitation to a beheading”, போலவே “Despair” நாவலும் காப்ஃகாவும் தாஸ்தோவ்ஸ்கியும் சேர்ந்து எழுதியதோ என்ற சந்தேகத்தை உருவாக்கும். ஆனால் தாஸ்தோவ்ஸ்கியின் ரஸ்கல்னிக்கொவின் மனம் போல நபகோவின் ஹெர்மானின் மனம் புலம்புவதில்லை ஊளையிடுவதில்லை. நபக்கோவும் தாஸ்தோவ்ஸ்கி போல கிறித்துவிடம் நம்பிக்கை வைத்தவரில்லை. தாஸ்தோவ்ஸ்க்கியின் நாவல்களின் நாடகீயத்தினை நபகோவ் பலமுறை ஏளனம் செய்திருக்கிறார். Despair நாவலை ஜெர்மன் சினிமா இயக்குனர் ஃபாஸ்பைண்டர் பிரமாதமான படமாக எடுத்திருக்கிறார்.
நாவலில் ஒரு பத்தி:
“That man, especially when he slept, when his features were motionless, showed me my own face, my mask, the flawlessly pure image of my corpse […] in a state of perfect repose, this resemblance was strikingly evident, and what is death, if not a face at peace – its artistic perfection? Life only marred my double; thus a breeze dims the bliss of Narcissus; thus, in the painter’s absence, there comes his pupil and by the superfluous flush of unbidden tints disfigures the portrait painted by the master.”
