அவதானிப்பு/மதுவந்தி


காற்று சுழன்று வீசுகிறது.
மின்னல் கண்ணைப் பறிக்கிறது.
மழை தூற ஆரம்பித்து விட்டது.
கையில் கோப்பைத் தேநீரோடு
ஜன்னலருகே நான்.
குளிர் காற்றில் சிறகொடுங்கி
மரக்கிளையிலமர்ந்த காகம்
கீழே விழுகிறது.
காத்திருந்தாற் போல
பூனையொன்று காகத்தைக்
கவ்விப் போக முனைகிறது.
எழுந்து போய் பூனையை விரட்டி
காகத்தைக் காக்க நினைத்தேன்.
“நான் கடவுளா ?”
தேநீரைச் சுவைத்தபடி
ஜன்னலோர வேடிக்கை தொடர்ந்தேன். மதுவந்தி.10.02.22.

4 Comments on “அவதானிப்பு/மதுவந்தி”

  1. நிச்சயம் யோசிக்க வேண்டிய விஷயம்.
    ஆதிமூலமே என்று அலறிய யானைக்காக சுதர்ஸனமெறிந்து முதலையைக் கொன்ற கதை நமக்கு நெடுங்காலமாகப் பாடம்.
    இதில் இரண்டு கருத்துக்கள்.

    கடவுள் யானைக்கு மட்டுமானவரா? முதலைகளுக்குக் கடவுள் கிடையாதா?

    இரண்டாவது, கடவுளை அழைத்ததால் யானைக்கு முன்னுரிமை கிட்டியதா? என்றால் கடவுள் கூப்பிட்டால் தான் வருவாரா?

    நிறைய கேள்விகளை சட்டிலாக அங்கேயே நிறுத்தி விட்டு, கடவுள் போலவே முடிவற்றதாக நீள்கிறது கவிதை.

    கருத்துள்ள கற்பனை.

  2. இயற்கையை ஒட்டியே முரண்படாமல் ….ஒரு பாதிக்கப்படாத சாட்சியாக வாழ்க்கை …அமையலாம் வாழலாம். ஆனால் மனசு கிடந்து அடித்துக் கொள்கிறதே…

Comments are closed.