பிராணன்/ செல்விபிரகாஷ்

அதோ அந்த அரசமரத்தடியில் தான்
அந்த யோகி தினமும் மூச்சுப்பயிற்சி செய்வார்.

எத்துணை விதமான பயிற்சிகள்.
காற்று இப்படியும் ஒரு விளையாட்டை இரசித்திருந்தது.

குகையின்
உள் புகுந்து வெளிவரும்
இரயில் வண்டியின் ஆராவாரம் அந்தக்காற்றுக்கு.

மூக்கின் தூவாரத்தில் புகுந்து வெளியே
வருகையில் பலவித ஜாலம்.

உள்முகமாய் பயணம் செய்து தன்னை உயர்த்திக்கொள்ள
மனிதன் படும்பாட்டைப்பார்த்து கேலி செய்தபடி
உடம்பினுள்
சென்று வெளிவரும் வேளை சிலிர்த்துப்போனது.

எத்துணை இரகசியம் அதனுடன் எடுத்துவந்ததோ? ..
ஓருநாளும் சொன்னதில்லை.

பிறகு
அதோ அந்த அரசஇலையில் அமர்ந்து
மூச்சுவாங்கியபடி களித்திருந்தது.

காற்றின் இந்த விளையாட்டு தொடர்ந்து
கொண்டிருந்தது.

இப்போதெல்லாம் அந்த அரச இலைகள்
மேல் காற்று சலசலத்து அசைகிறது வருத்தத்துடன்
விளையாட வழியில்லாமல்

காற்றைத்தேடி அந்த யோகியின்
ஆவி சென்றதாகக்கேள்வி.

சொல்லாமல் சேர்த்த ரகசியங்களை
யாரிடம் சொல்லுமோ அந்தக் காற்று.

🌹