
என்ன கொடுமை நடக்கிறது
இதை உடனே பார்.
எதையாவது
செய்துவிடு –
உன் பங்களிப்பாய்
குறைந்த பட்சம்
அடுத்தவருக்கு
ஒரு உடனடி பகிர்வாயினும்.
மானும் சிங்கமும்
பேசிக் குலாவும் மனிதநேயம்
இதோ உனக்காக.
இந்த உணவு அமிர்தம்
அந்த அமிர்தம் நஞ்சு.
வெட்டுப்பட்ட விலங்கின்
ரத்தாபிஷேகம்
நடு ராத்திரி சாலை கடக்கும்
மோகினிப் பிசாசு
வெள்ளத்தில் படகான கார்கள்
புல் தின்னும் புலி
மீன் உண்ணும் ஆடு
அந்த ஊர்ச்சாமி
இந்த ஊர் மயானக்கொடை.
மிலேச்ச நாட்டு ஆலய வழிபாடு
உள்நாட்டு வழிபாட்டுத் தல இடிப்பு
நடிக மகனின் முன் ஜாமீன்
வென்ற நாயகன் தந்த முத்தம்
மந்திரியை அடித்த மக்கள்
மக்களை அடித்த அதிகாரி
அந்தத் தலைவனுக்கு ஆரத்தி
இந்தத் தலைவனுக்கு செருப்புமாலை .
அந்த காவியத்தை தூற்றியெழுது
இந்த கழிசடையை காவிய முன்னெடுப்பாக்கு .
தடங்களை அழி.
புதுக் கம்பளம் விரி.
கண்ணால் காண்பதையும்
காதால் கேட்பதையும்
தீர விசாரிக்க
எவனுக்கு இருக்கிறது
நேரமும் பொறுமையும் அவசியமும்.
யாருக்கு வேண்டும்
உங்கள் நியாய சாம்ராஜ்யம்?
பார்க்க மட்டுமேயென
விழி பொருத்திக் கொண்ட
விழித்துக் கொள்ளா
திருதாஷ்டிரனானோம் நாம்.
வெறும் புலனங்களும்
ஊடகப் பீற்றல்களுமே
சாளரச் சஞ்சயக் கதியாகி விட்ட
நவயுகத்தில்
உலகம் முழுக்க
தினம் தினம் களம் காண்கிறது
முடிவுறா நாட்களின்
புதிய குருச்சேத்திரப் போர்.!

அற்புதம்
மிகவும் ரசித்தேன்
வேதனையான நிதர்சனம்.நன்றுரைத்தீர்
உண்மை