மழைக் குழந்தை/கோ.முத்துசுவாமி

              

பன்னாளாய் வேண்ட எட்டிப்
பார்த்தது மழையின் தூறல்!
சன்னமாய் தொடர்ந்து தூற
சலித்தனர் சிலபேர்! அன்னை
சொன்னசொல் பொறுக்காப் பிள்ளை
சுருங்கிடும் முகத்தைப் போல
துன்னிய மேகப் பாயை
சுருட்டியே மழையோ டிற்று!

“செல்லமே! மழையே! கண்ணே!
செல்வமே! வாவா” என்றேன்!
முல்லைப்பூச் சரத்தைப் போல
முகிழ்த்தது மின்னல் வானில்!
நல்லிளங் குழந்தை கண்ணில்
நீருடன் சிரித்தல் போல,
மெல்லவே மழையின் தூறல்
மீண்டது வெயிலின் ஊடே!

தூறிய மழையும், நோக்கித்
தாய்முகம் சிரிக்கப் பார்த்துத்
தேறிய குழந்தை ஆர்த்துத்
துள்ளியே ஆடுதல் போல்,
சீறியே பொழிந்து தள்ளிச்
சிரித்தது நிறைந்து நீராய்!
ஆறிய பூமி தாயாய்
அணைத்தது நீரை உள்ளே!
**

2 Comments on “மழைக் குழந்தை/கோ.முத்துசுவாமி”

Comments are closed.