இலக்கிய இன்பம் 34/கோவை எழிலன்


மண் கிழித்து ஒழுகு வெள்ளம்

புனித வெள்ளி என்பது உலக மக்களின் பாவங்களைத் தீர்க்க வந்த தேவமைந்தன் சிலுவையில் அறையப்பட்ட நாளாகும். சிலுவையில் அறையப்பட்ட அக்காட்சியையை வீரமாமுனிவர் தேம்பாவணியில் சிறப்பான உவமையோடு விளக்குகிறார்.

முகிலைக் கிழித்துக் கொண்டு வரும் மழை நீர்ப் பெருக்கானது புவியில் உள்ள அழுக்கை நீக்கிப் பாய்வது போல தேவ மைந்தரான இயேசுவின் உடலைக் கிழித்துக் கொண்டு பாய்ந்த குருதி வெள்ளம் உலகின் பாவக்கறைகளை அழித்துக் கொண்டு சென்றது என்ற வருணனை கொண்ட தேம்பாவணிப் பாடல் இது.

“கண் கிழித்து ஒழுகச் செந் தீக்
கதத்தினர் அடித்த பாலால்,
விண் கிழித்து ஒழுகும் மாரி
விதப்பு என, எந்தை யாக்கை
புண் கிழித்து ஒழுகும் செந்நீர்,
புரை வினை மலங்கள் தீர்ப்ப,
மண் கிழித்து ஒழுகு வெள்ளம்,
மலிவொடுஆங்கு ஒழுகிற்று அன்றோ
.”