மேகமலையில் மூன்று நாட்கள்! (5)



ஜெ.பாஸ்கரன்



ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் போல், வேளை தவறாமல், வகை வகையாய், வாய்க்கு ருசியாய் உணவு படைத்தவர் திரு. புஷ்பவனம். காலையில் டீ முடித்தவுடன், நேரில் வந்து எங்களுடன் பேசுவார். முந்தைய நாள் உணவு எப்படி இருந்தது, காரம், உப்பு, எண்ணை ஏதாவது கூட்டவோ, குறைக்கவோ செய்ய வேண்டுமா? இன்றைய மெனு, இதில் ஏதாவது மாற்றம் வேண்டுமா? என்றெல்லாம் கேட்டு, எழுதிக்கொள்வார். பெரிய ரெஸ்டாரெண்டுகளில் கூட காண முடியாத அக்கறையும், பவ்யமும், சிறப்பான உணவும் எங்களை வியக்க வைத்தன. மிகவும் சுத்தமான, ஆரோக்கியமான உணவைப் படைத்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி – எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம், இருந்தாலும் இவர் எங்கள் வயிற்றுக்குக் காட்டிய கரிசனம், ‘வயிறே பிரதானம்’ என்று சொல்ல வைத்தது!

சூப்பர்வைசர் போல, முழு பயணத்தையும் – ரயில் நிலையத்திலிருந்து மேகமலை, அதன் சுற்றுவட்டாரங்கள் என டூர், தங்குமிடம், உணவு, பின்னர் மதுரை விமான நிலையத்தில் டிராப் வரை – எங்களுக்கு அமைத்துக் கொடுத்தவர் திரு ஜெகன். பளிச்சென சிரிப்பு, தினமும் வந்து விசாரிப்பு, மூன்றாம் நாள் டூர் – வ்யூ பாய்ண்ட், ஹை வேவ்ஸ் தடுப்பணைகள், லோகல் எஸ்டேட் டூர் – என எங்களை நன்றாகக் கவனித்துக் கொண்டார். கையில் ஒரு பைனாகுலர் கொண்டு வந்து, மலை மேல் மேயும் காட்டெருமைகள், வ்யூ பாய்ண்டிலிருந்து, கேரளத்துப் பக்கம் வெள்ளிக் கம்பி போலப் பாயும் நீர்வீழ்ச்சி, கம்பம் மற்ற டவுன்கள் என எல்லாவற்றையும் கண்ணுக்கருகில் நிறுத்திவைத்தார்!

தர்ப்பூசணி அளவில் காய்த்துத் தொங்கிய பெரிய நார்த்தங்காய்கள், வெள்ளை, ஆரஞ்சு, சிவப்பு, ஊதா, மஞ்சள் என பல வண்ணங்களில் பூக்கள், நிலத்தடி நீரையெல்லாம் உறிஞ்சும் யூகலிப்டஸ் மரங்கள், இரப்பர் மரங்கள், இன்னும் பெயர் தெரியா நூற்றுக் கணக்கான வயதான மரங்கள் – இயற்கையை விஞ்சக் கூடிய சக்தி ஏதேனும் உண்டா என்று சவால் விட்டவாறு எங்களுடன் பயணித்தன!

சுமார் ஒரு கிமீ தூரத்திலிருந்த மாரியம்மன் கோயிலுக்குச் சென்றோம். அமைதியாகச் செல்லும் ஆற்றின் கரையில் அமைந்திருந்தது அந்தக் கோயில். கொஞ்சம் சரிவில் இறங்கி, சில படிகள் ஏறித் திரும்பினால், கோயில் கதவு மூடியிருந்தது (கொரோனாவினால் அல்ல!). இடது பக்கம் விநாயகர் சன்னதியும், வலது பக்கம் நவக்கிரக சன்னதியும், அம்மன் சன்னதிக்கு முன் குத்தி நிறுத்திய சூலத்தில் கருப்பு, மஞ்சள் கயிறுகளும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பக்தியைப் பறைசாற்றின.

மழை பெய்து மலைச் சாலைகளில் கொஞ்சம் சேறும் சகதியுமாக இருக்க, எங்கள் டவேரா அவ்வப்போது கொஞ்சம் வழுக்கியவாறு சென்றது. ஐந்தாறு கிமீ பயணித்து, இரண்டு மூன்று கிராமங்களைக் கடந்து, ‘வ்யூ பாய்ண்ட்’ அடிவாரம் வந்துசேர்ந்தோம். பல வண்ணங்களில் தலையில் போர்த்திய மழைக் கோட்டுடன், அங்கங்கே பெண்கள் தேயிலை பறித்துக் கொண்டிருந்தனர். இன்னும் இரண்டு மூன்று ஜீப் மற்றும் வேன்கள், சுற்றுலாப் பயணிகளுடன் வந்திருந்தன. சுமார் ஒரு கிலோமீட்டர் மலையேறியபின், வெளிச்சமான சமவெளியை அடைந்தோம். அங்கிருந்து பார்த்தால், கீழே கம்பம் போன்ற டவுன்களும், தூரத்தில் மேற்குத் தொடர்ச்சிமலைக் காடுகளும், மலைகளும், பள்ளத்தாக்குகளும் ஓர் அழகிய ஓவியம் போலத் தெரிந்தன. கீழே கிடைக்காத நெட் கனெக்‌ஷன், வ்யூ பாய்ண்டில் சுலபமாகக் கிடைத்தது!
பாறைகளில் அமர்ந்து போட்டோக்கள் எடுத்துக்கொண்டோம் – வீசிய காற்று சுகமாகத் தலைகோதிச் சென்றது! லுங்கியும், தொள தொளா டீ சர்டுமாய் வழுக்கைத் தலையுடன் இருந்தவர் எங்களைச் சுர்றி வந்தார் – போட்டோ
எடுத்தார். சிரித்தபடி, தலையைச் சொறிந்து, ‘நான்தான் இங்கு கைடு’ என்றார்!
ஆற்றின் குறுக்கே ஐந்து அணைகள் உண்டு என்றாலும், மழை காரணமாக ஒன்றே ஒன்றை மட்டும் எட்ட நின்று வேடிக்கைப் பார்த்துவிட்டு, மதியம் சாப்பாட்டுக்கு பங்களா வந்துவிட்டோம். நல்ல ஓய்வு – மாலைத் தேனீர், வீட்டைச் சுற்றியுள்ள செடிகொடிகளைப் பார்த்து, நடந்து, வியந்து, மாலைப் பொழுதைப் போக்கினோம்.

இரண்டு மணி நேரம் செல்லில் தட்டுத்தடுமாறி குவிகம் கடைசீ பக்கம் கட்டுரையை டைப் செய்தேன். ஈசானிய மூலைக்குச் சென்று கிடைத்த நெட் கனெக்‌ஷனில், இரண்டு போட்டோக்களுடன், கட்டுரையை அனுப்பி வைத்தேன்!

மேகமலை டீத்தூள் மற்றும் கிரீன் டீ வாங்கிக் கொண்டோம்.

இரவு வழக்கம்போல் நல்ல டின்னர் – தூக்கம்.

அதிகாலை எழுந்து, லக்கேஜ்களுடன் கிளம்பிவிட்டோம். அழகான அலுமினிய அட்டைப் பெட்டிகளில் இட்லிகளும், சாம்பார், சட்னிகளும் வழியில் காலை உணவாகச் சாப்பிடக் கட்டிக்கொடுத்தார் புஷ்பவனம். சிவா, ஜெகன் எல்லோருடனும் போட்டோக்கள் எடுத்துக்கொண்டு, விடை பெற்றோம். இரண்டு மணி நேரம் கழித்து, சாலையோரத்தில் நின்றபடி இட்லிகளைத் தின்றோம் – உண்மையிலேயே மல்லிகைப் பூ இட்லிகள்தான்; சட்னி சாம்பாருடன் அருமையாக இருந்தது – வயிறு புஷ்பவனத்தை வாழ்த்தியது! இன்னும் இரண்டு மணி நேரம் – பட்டிகள், கோட்டைகள் என்ற ஊர்களின் வழியே (அருப்புக்கோட்டை – இரண்டு முதலமைச்சர்களைத் தேர்ந்தெடுத்த ஊர் – நடுவில் வந்தது!), மதுரை புறவழிச்சாலையில் சென்றோம். மதுரை விமானநிலையம் அடைந்தோம் – ராம் அவர்களிடம் நன்றியுடன் விடை பெற்றுக்கொண்டோம்!

விரைவாக பேக்கேஜ் ஸ்கான் செய்து, செக் இன் செய்தோம். இன்முகத்துடன் பெல்ட், பர்ஸ், செல் போன்கள் எல்லாவற்றையும் கழற்றி செக்யூரிடி செக் முடிந்தது. அங்கு சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில், சிறந்த சேவைக்கான வாழ்த்துச் செய்தியில் சிரித்துக் கொண்டிருந்த பெண்ணின் முகம் எங்கோ பார்த்த மாதிரி இருந்தது – உடமைகளை எடுத்துக்கொண்டு திரும்பிப் பார்த்தபோது, போஸ்டர் முகம் அங்கே மும்முரமாகப் பயணிகளின் பெல்ட், பர்ஸ் என ட்ரேயில் வைத்துக்கொண்டிருந்தது!

மதியம் ஒரு மணி – எலுமிச்சை சாதம், புளியோதரை (நம்புங்கள், மதுரை ஏர்போர்ட்டில் கிடைத்தது) மற்றும் சிப்ஸ், சாத்துக்குடி ஜூஸ்டன் மேகமலை யாத்திரை ஒரு முடிவுக்கு வந்தது!

ஏர் இண்டியா விமானம், எங்களை அலுங்காமல் சென்னையில் இறக்கிவிட்டு, ஹைதராபாத் செல்லத் தயாரானது. வெளியே வந்து பெட்டிகளைப் பொறுக்கிக்கொண்டு, காத்திருந்த காரில் ஏறுமுன், சென்னை சூடு கருணையின்றி வரவேற்றது!






One Comment on “மேகமலையில் மூன்று நாட்கள்! (5)”

Comments are closed.