
இருபதாண்டு அனுபவமுள்ள மருத்துவர்
வற்றிய கண்களுடன்
உணர்ச்சியற்ற சொற்களில்
சன்னக் குரலில் விவரிக்கிறார்
காலன்
அந்த இளைஞனின் வாழ்விற்கு வரைந்துள்ள
வரையறையை
நெஞ்சை நிமிர்த்தி
முகத்தை இறுக்கிக் கொள்ளும்
அவன் கையை
சற்றே அழுத்தி
வலு சேர்க்கும்
பெண்ணின் கழுத்தில்
மஞ்சள் இன்னமும்
மஞ்சளாவாகவே
இருக்கிறது
புதிதாக பணித் தொடங்கியுள்ள
செவிலி உதட்டை கடித்துக் கொள்ள
வெளியே தொடங்குகிறது
தூறல்
லேசாக ஜன்னலை நனைத்தபடி

இந்த மாதிரி தருணங்களை அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும் இதன் வலி. மற்றவர்களுக்கு இது ஒரு காட்சி.
கலையின் பரிமாணம் மிகவும் நீண்டது. அதில் எல்லா படைப்புகளிலும் கவித்துவம் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை. ஆனாலும் கவிதைகளாக எழுதப்படாத படைப்புகளிலும் கூட கவித்துவம் தன் தூரிகையைத் தீட்டிவிட்டுச் செல்வதைப் பார்த்து இருக்கிறோம்.
ஆனால் வத்ஸலா அவர்களின் இந்தக் கவிதையில் கவிதையையும் கவித்துவத்தையும் தாண்டி வெகு விஸ்தாரமாக வேறொரு காட்சியாக விரிகிறது வாசகனின் பார்வை.
எழுதப்படாத வரிகள், எழுதிய வரிகளின் ஊடாக இன்னொரு காட்சியாக மிளிர்கிற மிகச் சிறந்த கவிதை இது.
அந்த மாதிரி தருணங்களில் மருத்துவருக்கு ஈரமிருந்தாலும், வர்த்தத்தில் கண்களும் வாயும் உலர்ந்துதான் போய்விடும். அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்! வாழ்த்துகள்!
மிக எளிமையான கூர்மையான தெளிவான சொற்கள். சொல்லாமல் சொல்லும் செய்திகள் இருளில் கண நேர மின்னலில் தோன்றும் காட்சியாக ஆழமாக பதிகின்றன.