
ஈரம் கசிந்த ஒரு சலசலப்பை
மனம் உணர்ந்தபடி அதைப்பற்றிய
சில அம்சங்களையோ அதை கருவாக்கி
சில சலசலப்புளையோ எழுத எத்தனிக்கையில்
வார்த்தைகளைத்தேடியபடி மனம் தவிக்கும்
தவிப்பில் ஈரமாகிப்போகிறது உள்ளம்.
எழுதி அதை ஆராதித்து அவதானித்து
அற்புதத்தை கவிதையாக்க, உற்சாக
ஊற்றெடுத்து உயிர் ஏனோ நனைந்து போகிறது.
சருகுகளை நீர் விட்டு ஈரமாக்கிவிட்ட மமதையில்
மழையின் கர்வம் மனதில்தொத்திக்கொண்டு
இங்கு கவிதையை ஈரமாக்கி சிலாகிக்கிறது.
சில் வண்டுகளின் சிலுசிலுப்பும்
பொன் வண்டுகளின் பூரிப்பும் புன்னகையை
பிச்சையிட்டு மனதை சாமரம் கொண்டு வீச
ஈரமழை ஏனோ நனைத்தபடி இருக்கிறது
எனக்கான கற்பனை பிரபஞ்சத்தை.
பூத்துக்குலுங்கும் ரோஜா இதழ் மேல் உறங்கும்
பனித்துளியாய், எனது கவிதை மனதைத்
தொற்றிக்கொண்டு விட்டது ஈரம், காதலைப்போல் தான்.
கசிந்து கரைமோதும் உணர்வுகளாய் காற்றின்
கதவுகளைத் தட்டியபடி ஈரம் தன்னை புதிதாய்
பரிணமித்து புதுப்பித்துக்கொள்ளும் போது காதலாகி
கலக்கும் உணர்வாய் காற்றாகி கரைந்து போகட்டுமே.
காலத்தின் கசிவுகளில் வாழ்க்கை புரண்டோட வித்தை நிகழ்த்தி
ஈரத்தை தெளித்து இதயத்தில் குளிரட்டுமே
