தூதனுப்பிய பின் ராதையின் நிலை/கோவை எழிலன்

அன்றொருநாள் தென்றலினை மதுரா விற்கே
அடியவளின் தூதெனவே அனுப்பி வைத்தேன்
இன்றுவரை நற்செய்தி ஏதும் இல்லை
என்கண்ணன் மாளிகையின் வாயில் காப்போர்
தென்றலதைத் தடுத்தனரோ இல்லை அந்தத்
தென்றல்தான் வடமதுரை தன்னை விட்டு
குன்றொத்த தோளழகர் வாழும் மாடக்
கூடலினை அடைந்ததுவோ மதுரை என்றே

எதுவாக இருந்தாலும் என்றன் நெஞ்சின்
ஏக்கமது தீரத்தான் வழியே இல்லை
மதுமலர்கள் பூத்திருக்கும் பொழிலில் நானும்
மாதவனும் களித்திருக்கும் நாளில் இந்த
நதியினிலே புனலாடி மகிழ்ந்தி ருப்போம்
நன்னீரும் குளிர்ந்திருக்கும் ஆனால் தீய
விதிவசத்தால் அவனெம்மைப் பிரிந்த பின்னர்
விரகத்தால் கொதிக்குமிந்த நதியைப் பாரீர்

கானிடையே பசுக்களினை மேய விட்டு
கண்ணனவன் எனைத்தேடி வந்தே என்றன்
பூநிறைந்த கூந்தலினை வருடிக் கொண்டே
புதுப்புதிதாய் பலகதைகள் சொல்வான் நாளும்
தீநிகர்த்த கொடுமனத்தான் அக்ரூ ரர்தாம்
தேவனையே கவர்ந்தேகி சென்ற பின்னால்
ஆநிறைகள் கூடஅவன் பிறிவாற் றாமல்
அழகிழந்து உடலிளைத்து நிற்றல் பாரீர்

மெச்சிடவே காதலித்த கண்ணன் இந்த
மெல்லிடையாள் தனைநீங்கிச் சென்ற போழ்தும்
அச்சுதனின் திருவுருவை உள்ளம் தன்னில்
அன்பதனால் சிறையெடுத்து விட்டேன் நாளும்
இச்சையுடன் கார்வண்ணன் எழிலைக் கண்டே
என்மனதைத் தேற்றுகிறேன் இல்லை யென்றால்
உச்சிவெயில் தனிலுருகும் வெண்ணெய் போலென்
உயிருருகிப் போயிருக்கும் விரகத் தாலே

கண்ணுக்குள் இருக்கின்றான் கண்ணன் என்றன்
கருத்ததிலும் கலந்தேதான் உள்ளான் ஆனால்
உண்ணாமல் காண்பதனால் ஒருவர் கொண்ட
உறுபசிதான் தீர்ந்திடுமோ அதுபோல் மாயக்
கண்ணனவன் மேனியைத்தான் தழுவி டாமல்
காரிகையென் உடல்கொண்ட பசலை போமோ
பெண்ணிவளின் ஆவியுடல் தன்னை விட்டு
போயிடுமுன் மன்னவனை தழுவு வேனோ