
பளீர் என்று
பல்பு ஒன்று கீழ் விழுந்து
நொறுங்கிய சத்தம் ஒரு நாள்
மாடிப் படிக்கட்டு விளிம்பில்
கூடு வைத்திருந்த பறவையைக்
குறி வைத்த பூனை
ஓசையைக் கீழிறைத்துவிட்டு
இரையை எடுத்துக் கொண்டு
ஓடியே போயிருந்தது

பிறிதொரு நாள்
பகல் பொழுதில்
மூன்று துண்டுகளாக
அடிபம்பு அருகே
சிதறிக் கிடக்கும் ஓணான்
ஊருக்குப் புறப்பட வேண்டிய
அவசரத்தோடு
உள் வீட்டு வாசல் திறக்கும்
விடியற்காலையில்
மிதியடி மீது கிடக்கும் செத்த எலி
நேற்று முன் தினம்
வெளி வாசல் நடையில்
தட்டுப்பட்டது
இளம் அணில் ஒன்றின்
சிறு வால் பகுதி மட்டும்
ஓயாத வேலை வைக்கிறது
ஏதாவதொரு பூனை
இடையறாத இடைவெளிகளில்
ஆனாலும்
அலைபேசி எடுத்தாலே
பல நூறு பூனைகளைப்
பார்த்துப் பார்த்து
ரசித்து ரசித்துப்
பேசிக் கொண்டே
இருப்பார்கள் தாயும் பிள்ளையும்
வீட்டு மதில் மேல்
பக்கவாட்டுச் சுவர் அருகே
எதிர் வீட்டு சன்னலின் தலைமாட்டில்
காலை நடை நேரத்தில் மரத்தில்
மீன் விற்பனையாளனின் சைக்கிள் அருகில்
பணிவான நடமாட்டத்தில் அல்லது
சாகசத் தாவலில் அல்லது
அரைக்கண் உறக்கத்தில்
மெலிதான குரலிசையில்
சிலபோது மழலை அழுகையில்
நேருக்கு நேர் பார்த்தபடியும்
பார்வை தவிர்த்து நகர்ந்தபடியும்
துரத்த நேர்கையில்
நியாயம் கோரியபடியும்
வெவ்வேறு வண்ணங்களில்
வித விதமான பரிமாணங்களில்
பார்க்கும் ஒவ்வொரு
பூனையையும்
நேசித்துத் தான் நகர்கிறது வாழ்க்கை
எனக்கும்!

அதிகாலை கதவைத் திறந்ததும்,
போர்டிகோ காரின் அடியிலிருந்து குட்மார்னிங் சொல்லும் பூனையும்
லிஸ்ட்டில் இருக்குமே…
அழகான கவிதை.
ஆழ்ந்த கவனிப்பும், ஆழ்மன ரசனையும் பூனைகளாக வெளிவந்து கும்மாளமிடுவதைப் பார்க்க முடிகிறது.
பூனைகளின் மென்மை கவிதை முழுவதும்.
அருமை தலைவரே.
சில சமயம் எரிச்சல் மூட்டினாலும் இயற்கை அழகுதான்.
பூனைகளை ரசிக்காமல்
இருக்க முடியுமா?
அவற்றின் ஒவ்வொரு
அசைவும் ஒயிலானது
தங்கள் அழகு அவற்றிற்கும் தெரியும். அதனால்தானே இத்தனை ரசிக்கத்தக்க கர்வம்!
ஜான்னவி.
காலைச் சுற்றிவரும் பூனை
வாலை ஆட்டி வரும் பூனை