ரூபாய் நூத்தி ஒண்ணு /நாகேந்திர பாரதி

‘ வந்த வேலையை முடிக்கலாம் .வாங்க’ என்று அட்டகாசச் சிரிப்புடன் அழைத்த ராமலிங்கத்தைத் தொடர்ந்து, சேர்ந்து கல்யாணச் சாப்பாட்டுக்கு மாடிப்படி ஏறினார் மாதவன். ஒன்றுவிட்ட சித்தப்பா மகன் திருமணம் .வீட்டுக்கு வந்து அழைப்பிதழ் கொடுத்து இருந்தார்கள். ‘கழுத்தில் தங்கச் செயின் ஒன்று கூட இல்லாமல் நான் வரமுடியாது’ என்று சொல்லிவிட்டாள் மனைவி விசாலம் . ‘தான் மட்டுமாவது போகவேண்டும் சொந்தம் விட்டுப் போய்விடக்கூடாது’ என்று வந்துள்ளார் மாதவன்.

ராமலிங்கமும் தூரத்துச் சொந்தம் தான் .’பட்டுவேட்டி, சட்டை அங்கவஸ்திரம் கைநிறைய மோதிரங்கள்’ உடன் வம்பளந்து கொண்டிருந்தவர் இவரைப் பார்த்தவுடன் இவருடன் சேர்ந்து கொண்டார். ‘ ஏதாவது கல்யாணம் காட்சியில்தான் பார்க்க முடியுது, வீட்டுப் பக்கம் வரக் கூடாதா’ .கேள்விக்குப் பதிலாக ஒரு வெற்றுப் புன்னகை தான் மாதவனிடம் இருந்து

குடும்பத்தின் வறுமை, இயலாமை, பையன் ஒழுங்காகப் படிக்காமல், இப்போது தெரிந்தவர் கடையில் வேலை. கல்யாணத்திற்குச் செய்ய , கடன் வாங்கிக்கொண்டு வருகிற வாழ்க்கை நடத்தும் இவரது குடும்ப நிலைமை அவருக்கு தெரியாதா என்ன, அவருக்குக் கொடுக்க மனம் இருக்காது. ஆனால் பேச்சு மட்டும் அன்பு நிரம்பி வழியும்.

‘ உங்ககிட்ட சொல்லலையே மாதவன், பையனுக்குப் பொண்ணு பாக்கறோம் , உங்க பக்கத்துல யாராவது தெரிஞ்சவங்க நல்ல இடமா இருந்தா சொல்லுங்க ஆனால் வசதியாகவும் இருக்கணும் ‘என்று இவரது நாலு முழ வேட்டியை நக்கலாக பார்த்தபடியே அவர் கேட்ட தோரணையில் தெரிந்தது திமிர். மாதவன் விடுவிடுவென்று படியேறினார் .’ என்ன ஓய் கல்யாண விருந்து சாப்பாட்டுக்கு அவசரமா . ரொம்ப நாளைக்கப்புறம், நல்ல சாப்பாடோ ‘ என்று கேட்டபடி மூச்சு வாங்க பின்தொடர்ந்தார் ராமலிங்கம்.

இதை விசாலத்திடம் சொல்லக்கூடாது .அவ்வளவுதான் மறு நிமிடமே அவர்கள் வீட்டுக்குச் சண்டைக்குப் போய் விடுவாள் . சில வருடங்களுக்கு முன்பு , மாதவனும் வேலை பார்த்துக் கொண்டு இருந்தபோது, ‘பொட்டிக் கடை வைக்க நம்ம கிட்ட கடன் வாங்கிட்டு போனது, திருப்பித்தர மறந்தாச்சு. நாங்களும் பெருந்தன்மையா விட்டாச்சு. இப்ப வியாபாரம் பெருகி கையில் நாலு காசு வந்ததும் இந்தப் பேச்சு வர்றதா ‘ என்று வாங்கு வாங்கு என்று வாங்கிவிடுவாள் .

அவள் அப்படிக் கேட்பது போல் ஒரு நிமிடம் கற்பனை செய்துகொண்டு திருப்தியோடு சாப்பிட்டு விட்டு திரும்பும் போது, ஹாலில் ஓரமாய்ச் சேரில் தலையை பிடித்தபடி சாய்ந்திருந்த ராமலிங்கத்திடம் நெருங்கி ‘என்ன பண்றது ராமு’ என்றவரிடம் ‘ பிரஷர் ஏறிடுச்சு, பையன் வேலை வேலைன்னுட்டு டாக்டரிட்ட கூட்டிட்டுப் போக மாட்டேங்கிறான். பக்கத்திலேதான் ஆஸ்பத்திரி . கொஞ்சம் கூட்டிட்டுப் போக முடியுமா’ என்ற அவரோடு சேர்ந்து மண்டபத்தை விட்டு வெளியே வந்தார் .

வரும்போது மொய் எழுதும் இடத்தில் இவர் ‘நூத்தி ஒண்ணு ‘ என்று எழுதியதைப் பார்த்தவர் எகத்தாளமாக ‘என்ன ஓய் வெறும் நூத்தி ஒண்ணு தானா, நான் ஆயிரத்தி ஒண்ணு எழுதியிருக்கேன் ‘ என்று கிண்டலாகக் கேட்டபடி தன் மேல் சாய்ந்தவரை ஆட்டோவில் ஏற்றி துணைக்கு மாதவனும் ஏறிக்கொண்டார்.