குடும்ப ஆல்பம் தயாரித்து விட்டீர்களா?/அழகியசிங்கர்

                இரண்டாண்டுக்கு முன் என் பெண் மாமியார் இறந்து விட்டார்.  அவர் நிறை வாழ்வு வாழ்ந்துதான் இறந்தார்.  
என் பெண்ணைப் பார்த்துக் கேட்டான்.  உன் மாமியாரை நினைவு படுத்துகிற மாதிரி அவருடைய குரலைப் பதிவு செய்திருக்கிறாயா என்று.  
என் பெண் இல்லை என்று குறிப்பிட்டாள்.
அதைக் கேட்கும்போது எனக்கு வருத்தமாக இருந்தது.  80வயது வாழ்ந்த ஒரு பெண்மணியின் குரலைப் பதிவு செய்யாமல் விட்டுவிட்டார்களே என்று. உயிரோடு இருக்கும்போது ஒவ்வொருவரும் ஒரு குடும்ப தொகுப்பைத் தயாரிப்பது அவசியம். நாம் சிறிய உலகத்தில் இருக்கிறோம்.  நம் கூட இருப்பவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் நம்மைப் பிரிந்து விடுவார்கள். அவர்களை ஞாபகப்படுத்துகிற மாதிரி குடும்ப தொகுப்பைத் தயாரிக்க வேண்டும். இதற்கு நம் குடும்பத்தில் உள்ள யாரும் சம்மதிக்க மாட்டார்கள். அவர்களுக்குத் தெரியாமல்தான் இதைத் தயாரிக்க வேண்டும்.
இன்றைய சூழ்நிலையில் இதற்கெல்லாம் வசதி இருக்கிறது. 
நான் முதன் முதலாகப் பல ஆண்டுகளுக்கு  முன் காசெட்டு ரிக்கார்டர் வாங்கினேன்.  இன்னும் கூட ஞாபகம் இருக்கிறது பர்மா பஜாரில் நான் போய் வாங்கியது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு இருக்குமென்று நினைக்கிறேன்.  
அதை வாங்கியவுடன் ஒரே உற்சாகம்.  எளிதாகக் கையில் எடுத்துக்கொண்டு போகும்படி இருக்கும். அதில் காசெட்டைப் போட்டுப் பதிவும் செய்யலாம்.  அதை வாங்கியவுடன் எல்லோருடைய குரல்களையும் பதிவு செய்வதுதான் என் வேலையாக இருந்தது.
முதலில் என் பாட்டியும் 3 வயது என் பெண்ணும் பேசுவதுபோல் பதிவு செய்தேன்.   என் பாட்டி பேத்திக்கு ஸ்லோகம் வாசிப்பதுபோல்தான் பேசினார்.  ஸ்லோகத்தைப் பாட்டி சொல்லச் சொல்லப் பேத்தி திருப்பிச் சொல்கிறாள்.  இதுதான் முக்கியம் என்று தோன்றியது.  பாட்டியின் குரலைப் பதிவு செய்து விட்டேன்.  கூடவே 3 வயது பேத்தியின் குரல்.
எனக்குக் கட்டுக்கடங்காமல் குரல் பதிய வைக்கும் ஆசை அதிகரித்துக்கொண்டே போகிறது.  குரல் மட்டுமல்ல.  காணொளியும்.
பல ஆண்டுகளாக இலக்கியக் கூட்டங்கள் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறேன்.  முன்பெல்லாம்  எழுத்தாளர்கள் பேசிய பேச்சுக்களை ஆடியோவில்  ஆர்வத்துடன் பதிவு செய்திருக்கிறேன். விவாதங்கள், சர்ச்சைகள் எல்லாவற்றையும் பதிவு செய்து வைத்திருக்கிறேன்.
தொழில் நுட்ப உலகத்தில் எல்லாம் மாறி விட்டது.  இப்போதெல்லாம் காசெட் என்பதே இல்லை.  நான் சேகரித்த காசெட்டுகள் எல்லாம் பதிவு செய்தபடி இருக்கின்றன.  அதைக் கேட்பதற்கும் இப்போது கருவி இல்லை.  அதை வேற எதிலாவது இன்னும் ஒரு முறை பதிவு செய்ய முடியாத நிலை இருக்கிறது.
அதேபோல் நிறையா காணொளி காசெட்டுகள்.  தமிழில் முக்கியமான எழுத்தாளர்கள் பேசியதெல்லாம் ஆடியோ காசெட்டுகளில் தங்கி விட்டார்கள். மணிக்கொடி எழுத்தாளர் சிட்டி, வல்லிக்கண்ணன், தி.க.சி, காசியபன், சுஜாதா, ஞானக்கூத்தன், ந.முத்துசாமி என்று பல எழுத்தாளர்களின் குரல்கள் ஆடியோ காசெட்டில் உள்ளன. இதை எப்படி மாற்றுவது என்பது புரியாமல் இருக்கிறேன். இதற்கு எதாவது சுலபமான வழி உண்டா?
சமீபத்தில் (குறைந்தது 25 எழுத்தாளர்கள்) பத்து கேள்விகள்’ பத்து பதில்கள் என்ற பெயரில் காணொளி எடுத்திருக்கிறேன்.  முக்கியமான பதிவுகளாக அவை இன்னும் இருக்கின்றன. ஒருசில எழுத்தாளர்களை நான் எடுக்காமல் விட்டுவிட்டேன்.  அவர்களில் முக்கியமானவர்கள். நகுலன், காசியபன், க.நா.சு, பிரமிள், ஐராவதம், ஸ்டெல்லா புரூஸ்.
அதேபோல் சமீபத்தில் 96 வயதான அப்பாவை அவர் உயிரோடு இருந்த காலத்தில் காணொளியில் பதிவு செய்து விட்டேன். இப்போது நாம் வைத்திருக்கும் ஸ்மார்ட் போனிலே இதையெல்லாம் செய்து விடலாம்.  முன்பு முடியாது.   
இப்படி குடும்ப தொகுப்பு தயாரித்து விட்டேன்.  குடும்ப தொகுப்பு என்ற ஒன்றைத் தயாரிக்க நம் வீட்டில் உள்ளவர்களே சம்மதிக்க மாட்டார்கள்.  அவர்கள் எளிய மனிதர்கள். 
சமீபத்தில் நான் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன்.  என் உறவினர் ஒருவரின் குரல் ஓகே...மௌலி  என்று கேட்டது.  அவர் உயிரோடுதான் இருக்கிறார் உயிரோடுதான் இருக்கிறார் என்று கத்துகிறேன்.  எல்லாம் கனவில்.  
இதோ அவர் இறந்துபோய் ஒரு வருடம் ஆகப்போகிறது. அவருடைய குரலை, காணொளியை யாரும் பதிவு செய்யவில்லை. அவருடைய வீட்டில் அவர் முக்கியமான கதாநாயகர்.  அவர் குரலை அவர் காணொளியை குடும்பம் பதிவு செய்திருக்க வேண்டும்.  ஏன் செய்யவில்லை? ஏனென்றால் தெரியாது.    

2 Comments on “குடும்ப ஆல்பம் தயாரித்து விட்டீர்களா?/அழகியசிங்கர்”

Comments are closed.