
காலையில் இரண்டாவது ட்ரிப்பிலேயே பஸ் ப்ரேக் டவுன்! அவசரமாக ஆபீஸ் போகின்றவர்கள், ஹோல் சேலில் பெருட்கள் வாங்கப் போகின்றவர்கள், மாலையில் விற்க, வாடிக்கையாக உதிரிப் பூ வாங்கப் போகிறவர்கள், ‘சும்மா’ப் போகிறவர்கள் எல்லோரும் முணு முணுத்தபடி இறங்கினார்கள். நீலச் சட்டை யூனிஃபார்மில், கையிடுக்கில் தோல் பையை மாட்டியபடி கீழே இறங்கிய கண்டக்டர் ஆறுமுகம், அங்கிருந்தவர்களின் பயணச்சீட்டுகளில் தேதியும், நேரமும் எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தான்.
அந்த ரூட்டில் வரும் அடுத்த வண்டியில், பயணிகளை ஏற்றி அனுப்ப வேண்டியது அவன் பொறுப்பு. சாலையின் நடுவில் நின்று, ஒரு பக்கமாக சாய்ந்து வந்துகொண்டிருந்த பேருந்தைக் கை நீட்டி நிறுத்தச் சொன்னான். ஏற்கனவே கும்பலில் பிதுங்கிக் கொண்டிருந்த வண்டி, நிற்காமல் சென்றது. அதிலிருந்த கண்டக்டர், இடது கை விரல்களை விரித்து ’இடமில்லை’ என ஆட்டிச் சென்றான்!
பொறுமையிழந்து பயணிகள் திட்டிக்கொண்டிருந்தனர்.
“வண்டி எடுக்கும்போதே எல்லாம் சரியா இருக்குதான்னு செக் பண்ணமாட்டாங்களா?” என்றார் ஒரு பெரியவர்.
“டீஸல் வெலை ஏறிடுச்சுன்னு, கட்டணத்தை ஏத்தறதுலெ ஒண்ணும் கொறச்சல் இல்லே” என்றாள் கையில் துணிப் பையுடன் நின்ற பூக்காரி.
“அடுத்த பஸ் எப்போ வரும்? என்னைக் கொஞ்சம் சொல்லி சீக்கிரமா ஏற்றி விட்டுர்ரீங்களா?” கெஞ்சினாற்போல் கேட்டாள் ஒரு மத்திய வயதுப் பெண்மணி.
‘இது இப்படித்தான்’ என்பதைப்போல, அடுத்த பஸ் வருகிறதா என்று சாலையை வெறித்த படி ஒருவர்.
குனிந்த தலை நிமிராமல் செல்லை நோண்டிக்கொண்டிருந்த இளைஞர்கள், இளைஞிகள்!
எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் அடுத்த வண்டிக்குக் காத்திருந்தான் ஆறுமுகம். “டூட்டி முடிஞ்சு நேரா வீட்டுக்கு வந்துருய்யா; கொளந்தைக்கு காய்ச்சலாய் இருக்குது” என்ற மனைவியின் கவலை தோய்ந்த குரல் மனதில் ஓடியது.
அடுத்த பேருந்து வரும்போதே தெரிந்தது – கொஞ்சம் சுமார்க் கூட்டமாக இருந்தது. ப்ரேக் டவுன் பஸ், அருகே கூட்டம் பார்த்து, மெதுவாக அருகில் வந்து நின்றது.
“என்ன ஆச்சு ஆறுமுகம்?” புதிதாய் டூட்டியில் சேர்ந்துள்ள கண்டக்டர் கேட்க,
“ப்ரேக் ஃபெய்லியர்” என்றான் ஆறுமுகம்.
அதற்குள் கூட்டம் முண்டியடித்து ஏறத் தொடங்கியது. யாருடைய ஹாண்ட் பேகோ காற்றில் பறந்தது. “ஐயோ என் செருப்பு” என்று ஒரு குரல். “ஏன்யா இப்படித் தள்ளறே?” என்றது ஒரு தடித்த பெண்ணின் குரல்! கொண்டையுடன் ஒரு மடிசார், கோலாட்டம் அடிப்பதுபோல் ஒற்றைக் காலில் தாவியது. காது, கழுத்து, மூக்கு எல்லாம் தங்க நகைகள் மின்ன, ஒரு மஞ்சள் நிறப் பட்டுப் புடவை, ‘இன்னா எயவுடீ இது, மாடு மேரி வந்து வுளுவறானுங்க, நின்னு நிதானமாப் போனா இன்னா?’ என்று கருவியது. கால் தடுக்கி விழப்போன கருப்புக் கோடுபோட்ட சட்டை ஆசாமி, அகலமாக அருகில் நின்றுகொண்டிருந்த பெண்ணின் மீது விழ, அவள் அவனைப் பிடித்துத் தள்ள, அருகிருந்த ஜிப்பா போட்ட ஆசாமி ‘ஐயோ’ என்றலறினான் – காலில் பட்ட மிதியின் வலியினால்! ‘
நாக்கைத் தொங்க போட்டு, வாலாட்டியபடி வேடிக்கைப் பார்த்தது ஒரு வெள்ளை நாய்க்குட்டி!
பேருந்தின் உள்ளிருந்து, ஆண்களும், பெண்களும் வேடிக்கை பார்த்தபடி, தங்கள் இருக்கைகளில் நன்றாக, முழுமையாக அமர்ந்து கொண்டார்கள். புதிய வண்டியின் கண்டக்டர், பாதி உடம்பு உள்ளேயும், மீதி வெளியேயும் தொங்கியபடி, “வண்டி புல்லாயிடிச்சு…. அடுத்த வண்டியிலே வாங்…..” சொல்லி முடிப்பதற்குள் விசில் சத்தம் கேட்க, டிரைவர் சைட் கண்ணாடியைப் பார்த்தபடி, மெதுவாக வண்டியை நகர்த்தினார். ஒரு பக்கம் சாய்ந்தபடி நகர்ந்தது அந்த வண்டி.
இடம் கிடைக்காதவர்களில் இரண்டு பேர் பேசியபடி, ஒரு ஆட்டோவில் ஏறிச் சென்றனர். மற்றொருவர், ‘ஷேர் ஆட்டோ வருமா இங்கே?’ என்றார். செருப்பைச் சரி செய்தவாறே, பிளாட்பாரத்தில் அமர்ந்தார் ஒரு பெண்மணி. கேட்பாரற்றுக் கிடந்தது ஒற்றைச் செருப்பு ஒன்று. வாலை ஆட்டியபடி, எதிர்ப் பக்கத்திலிருந்த குப்பைத் தொட்டியை நோக்கி ஓடியது நாய்!
“ஜப்பான் மாதிரி இருக்கணும்யா – என்ன ஒழுங்கு, க்யூ சிஸ்டம்” – காட்டாங்குளத்தூர் தாண்டாத வெத்து ஒன்று, தன் வாட்ஸ் ஆப் அறிவை அளந்து கொட்டியது.
இந்தக் குழப்பத்தில், விசில் அடித்தபடியே, பேருந்துக்குப் பின்னால் ஓடிக்கொண்டிருந்தார் புதிதாய் வேலையில் சேர்ந்துள்ள அந்த இரண்டாவது கண்டக்டர்!
